அம்பாறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் மேதினப் பேரணியும், பொதுக் கூட்டமும்
தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்பன நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றன.
அதில் குறிப்பாக 21 மாவட்டங்களினுடைய முக்கிய தளங்களில் நடைபெற்ற பேரணிகளில் அம்பாறை மாவட்டத்தினுடைய மாபெரும் மேதினப் பொதுக்கூட்டம் வெகு விமர்சையாக பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் அம்பாறை மாநகரில் (01) நடைபெற்றது.
இந்தப் பேரணியானது அம்பாறை ப்ரவுன் சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு, நடை பவணியாக அம்பாறை மாநகருக்குச் சென்றடைந்து மக்கள் விழிப்புணர்வுக்கான, மக்களுக்காக சில தெளிவூட்டல்களும் நடைபெற்றன.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஸந்த பியதிஸ்ஸ, அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இந்த ஆட்சியிலே எதிர்க்கட்சிகள் செய்கின்ற பித்தலாட்டங்ள் தொடர்பாக இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, முக்கியமான சில அமைச்சர்கள், கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தவர்கள் இந்த ஆட்சியில் எதிர்வருகின்ற மாதங்களில் சிறையில் அடைக்கப்பட இருப்பதைப் பயந்து அஞ்சி, இவர்கள் இந்த அரசாங்கத்துக்கு சேறு பூசுகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். குறிப்பாக, பல அமைச்சர்களுடைய மே, ஜுன் மாதங்களில் வழக்குகள் நடைபெறவிருப்பதினால் அவர்கள் இவ்வாறு தெரிவிப்பது பற்றி மக்கள் ஒன்றும் பீதி அடையத் தேவையில்லை. இந்த ஊழல்வாதிகள் நிச்சயமாக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற மிகப் பிரதானமான கருப்பொருளை நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். இதை மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.
அதில் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் அபிமானிகளாக கல்முனை பிராந்தியத்திலிருந்து சுமார் எண்ணூறுக்கும் அதிகமான தொழிலாளிகளும், பெண்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேசத்தில் இருந்து சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனை, மருதமுனை, நற்பட்டிமுனை போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் பத்துக்கும் அதிகமான பேருந்துகளிலே மக்கள் சாரை சாரையாக அம்பாறை நகரை நோக்கிச் சென்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.






(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
