உள்நாடு

ஓட்டமாவடி பிரதேசம் பாரிய ஆபத்தில் – மாற்று நடவடிக்கை கோரி முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் மகஜர்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதன் பாதகங்கள், அதனால் மக்கள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துக்கள் தொடர்பிலும் அதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெளிவுபடுத்தியும் முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் பிரதேச அபிவிருத்திக்குழுத்தலைவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களுக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் தனது கோரிக்கையில், மேற்படி விடயம் தொடர்பில் 2023.07.04ல் வெளியிடப்பட்ட இல 2339/03 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட 207 மீராவோடை மேற்கு, 207B மீராவோடை கிழக்கு, 208B ஓட்டமாவடி தெற்கு,208C ஓட்டமாவடி 02, 208 ஓட்டமாவடி 03, 208 B/2 ஓட்டமாவடி வடக்கு, 210A கள்ளிச்சை,210 A/1 வடமுனை,210 A/2 ஊத்துச்சேனை, 207A மாஞ்சோலை, 210E புனானை மேற்கு,210 வாகனேரி, 210B காகித நகர், 210C தியாவட்டவான் ஆகிய 14 கிராம சேவகர் பிரிவுகள் அடங்கிய பிரதேசங்களை நகர அபிவிருத்தி பிரதேசமாகப்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி அறிவிப்பானது இப்பிரதேசத்திலுள்ள நிறுவனங்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்களின் எந்தவிதமான அபிப்பிராயங்களும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் தன்னிச்சையாக செயற்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றேன்.

கடந்த 05.04.2026ல் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையில் தங்களின் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வின் பின்பு தான் இப்பிரதேசத்தில் இவ்வாறான பிழையான செயற்பாடு இடம்பெற்றுள்ளது என்பதை இப்பிரதேச மக்களால் அறிய முடிந்தது.

நான் அறிந்த வரையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 உள்ளுராட்சி மன்றங்களில் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் நகர சபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்கள் மாத்திரம் தான் மேற்படி நகர அபிவிருத்தி விரிவாக்கல் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் எஞ்சியுள்ள 09 உள்ளுராட்சி மன்றங்கள் மேற்படி திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகிறேன்.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளில் விசேடமாக 207 மாஞ்சோலை, 210E புனானை மேற்கு, 210B காகித நகர், 210 ஏ/1, 210C தியாவட்டவான், 210 வாகனேரி, 210 A/2 ஊத்துச்சேனை, 210A கள்ளிச்சை ஆகிய 08 கிராம சேவகர் பிரிவுகள் மிக மிக பின் தங்கிய, வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட அடிப்படை வசதிகளற்ற கிராம சேவகர் பிரிவுகளாகும். அத்தோடு, இப்பிரதேசங்களில் வாழும் குடும்பங்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களது வாழ்விட உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சட்டபூர்வமான ஆவணங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. என்பதை தாங்களும் உறுதியாக அறிவீர்கள்.

இந்நிலையில், மேற்கூறிய 08 கிராம சேவகர் பிரிவுகளும் நகர அபிவிருத்தித்திட்டமிடல் பிரதேசமாக அமுல்படுத்தப்படுமாக இருந்தால் இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதோடு குறிப்பாக, ஒரு கழிப்பறையை அமைத்துக்கொள்வதற்குக்கூட அனுமதியை பெற்றுக் கொள்ள முடியாத துப்பாக்கியத்துக்குள் தள்ளப்படுவதாக உணர்கிறார்கள்.அத்தோடு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேசத்தில் வாழும் மக்கள் மிக மிக இடநெருக்கடியோடு வாழ்ந்து வருவதை நீங்களும் தெளிவாக அறிந்து வைத்திருப்பீர்கள் என பெரிதும் நம்புகிறேன்.

எதிர்காலத்தில் ஒரு வீட்டை அமைத்துக்கொள்வதற்கு ஆகக்குறைந்தது 06 (ஆறு) பேர்ச் காணி தேவை என்பது நகர அபிவிருத்தி சபையின் அடிப்படைத்தேவைப்பாடு என்பது சாத்தியப்படுத்தக்கூடிய ஒன்றாக இப்பிரதேச குடியிருப்பாளர்கள் கருதவில்லை.இவ்வாறான சூழ்நிலையில் மேற்படி திட்டம் இதுபோன்ற கிராமங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட பாதகமாகவும், காலதாமதமாகவும், பணச்செலவுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிடும்.கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளும் நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் இதனை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கு முன்பாக மிக முக்கியமாக பின்வரும் விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.01.2023.07.04ம் திகதிய 2339/03 இலக்க அதிவிசேட வர்த்தமானியை இரத்துச்செய்து நகரமயப்படுத்தலுக்கு போதுமான வளம் கொண்ட கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் அடையாளப்படுத்தலும், புதிய வர்த்தமானி பிரகடனமும்.02.இப்பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள். சமூக மட்ட அமைப்புக்கள், சமூகப்பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளல்.03.இப்பிரதேசத்தில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் வாழ்விட உரிமையை உறுதிப்படுத்தலும், சட்ட பூர்வ உரிமையை உறுதிப்படுத்தலும், சட்ட பூர்வமான ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல்.எனவே, தங்களின் அரசாங்கத்தின் பிரதான தொனிப்பொருளான ‘சமத்துவமான மற்றும் பொதுமக்கள் உள்ளடக்கக்கூடிய (People Inclusive) அணுகுமுறையினுடாக’ செயற்படுத்தப்பட வேண்டுமென்பது இப்பிரதேச மக்களின் பலமான எதிர்பார்ப்பாக இருப்பதனால், இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து நடைமுறைக்குச்சாத்தியமான புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட ஆவண செய்து தரும்படி இப்பிரதேச மக்களின் சார்பாக பணிவுடன் கோரிக்கை விடுக்கிறேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தனது கோரிக்கை மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த மகஜரின் பிரதிகள்மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *