உள்நாடு

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலமானமுன்னோடி நெற்செய்கை வவுனியாவில் வெற்றி; வடக்கு கிழக்குக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டம்

சேதனப் பயன்பாட்டின் மூலம் உணவு உற்பத்தி விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல் என்ற திட்டத்தின் கீழ் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட தோழமை பண்ணை பரீட்சார்த்த நெற்செய்கை பெரிதும் வெற்றியளித்துள்ளதாக ஈழ மக்கள் ஐக்கிய முன்னணி செயலாளர் மாட்டின் ஜெயா தெரிவித்துள்ளார்.

வவுனியா, கள்ளிக்குளத்தில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட சேதனப் பசளையைப் பயன்படுத்தி பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட இந்நெற்செய்கை மூலம் 121 மூடைகள் அறுவடை கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனால் தோழமை பண்ணை செய்கை திட்டத்தை முற்றிலும் சேதனப் பசளைப் பயன்பாட்டு பயிர்ச்செய்கைத் திட்டமாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இரசாயனப் பசளையையோ கிருமி நாசினிகளையோ பாவிக்காது சேதனப் பசளையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் உணவு உற்பத்தி விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல் என்ற தோழமை பண்ணை செய்கை திட்டத்தை வவுனியா கள்ளி குளத்தில் பரீட்சார்த்தமாக முன்னெடுத்தோம்.

இத்திட்டத்தின் கீழ் நான்கு ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைக்கு தேவையான நெல், சேதனப் பசளை உட்பட அனைத்தையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம். எமது வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் கலை தலைமையில் பத்து நபர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் ஏக்கருக்கு 30 மூடைகள் படி 121 மூடைகள் அறுடையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது அசேதனப் பசளையைப் பயன்படுத்தாது சமூகத்தை தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பரீட்சார்த்த திட்டத்திற்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாகும்.

அதனால் இத்திட்டத்தை வடக்கு கிழக்குக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். நெற்செய்கை உட்பட மரக்கறிச் செய்கை அடங்கலாக உணவு உற்பத்தி விவசாயத்துறைக்கு தோழமை பண்ணை செய்கை பரவலாக்கப்படும்.
சேதனப் பசளையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப் பொருட்களுக்கு உள்நாட்டிலும் குறிப்பாக வெளிநாடுகளில் அதிக கேள்வி நிலவுகிறது. அதனால் இத்தகைய உணவு உற்பத்தி பயிர்ச்செய்கை அறுவடைகளில் உள்நாட்டு நுகர்வுக்கு மேலதிகமானவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதன் ஊடாக நாட்டுக்கு அதிக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்க வாய்ப்பும் கிடைக்கப்பெறும்.

அத்தோடு இத்துறையில் தொழில் வாய்ப்புக்களும் உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *