உலக மனநல தினம் 2024; பணியில் மனநலம்
ஒவ்வொரு ஆண்டும், உலக மனநல தினம் அக்டோபர் மாதம் 10 ம் திகதி கொண்டாடப்படுகிறது.”பணியில் மனநலம்” என்ற கருவை தாங்கியதாக இவ்வாண்டின் கருப்பொருள் அமைந்துள்ளது.
பணியிடத்தில் மனநலம் என்பது ஒருவரின் நல்வாழ்வு, அவர் பணிபுரியும் இடத்தின் விருத்தி மற்றும் அவருடன் தொடர்பான அனைத்து விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. பணி ஆரோக்கியம் என்பது தனிநபர், நிறுவனங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களாலும் அனுபவிக்கப்பட வேண்டிய நல்வாழ்வுடன் ஒன்றிணைந்து போகின்ற முக்கிய அம்சமாகும்.
பணி ஆரோக்கியம் என்பது செழிப்பான ஒரு நாட்டின் அத்திவாரமாகும். ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் பணியில் திருப்தியை உணரக்கூடியவராக இருப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது நிறுவனங்களின் பொறுப்பு போன்று நாட்டின் பொறுப்புமாகும்.
ஆரோக்கியமான பணிச்சூழல்கள் பணியாளர்களது மன ஆரோக்கியத்திற்கு ஒரு பாதுகாப்புக் காரணியாகச் செயல்படுகிறது. இது பணியாளர்கள் தமது பணியை மகிழ்ச்சியாக செய்யவும், உற்பத்தித் திறனை அதிகரித்து, உச்ச பயனை அடையவும் வழிவகுக்கிறது.
அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆரோக்கியமற்ற நிலைமைகள், குறிப்பாக பாரபட்சம், பணியில் அதீத அழுத்தம், பணிக்கு பொருந்தாத சம்பளம் போன்ற விடயங்கள் மோசமான பணிச் சூழலை உருவாக்கி கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்த காரணமாக அமையலாம். அத்துடன் பணியாளர்களின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கச் செய்யலாம். இது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய நிலையை ஏற்படுத்தி இறுதியாக பணியின் உற்பத்தித்திறனை படுமோசமாக பின்னடைய வைக்கவும் காரணமாகலாம்.
நீங்கள் ஒரு பாடசாலையின் அதிபராக இருந்தால், ஒரு நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்தால், ஒரு தொழிற்சாலையின் மேலதிகாரியாக இருந்தால் அல்லது ஏதேனும் ஒரு பணியிடத்தின் உரிமையாளராக இருந்தால். உங்கள் பணியிடத்தில் அமைதியை, அழகை ஏற்படுத்தி பணியாளர்களின் மனநலத்தை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கும் பொறுப்புக்கு உட்பட்டவராவீர் என்ற விடயத்தை இன்றைய நாளில் உங்கள் மேலான நினைவுக்கு கொண்டு வருகிறோம். அதற்கென்று சரியான, முறையான வேலைத்திட்டங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். பணியிடத்தை மனதுக்கு பிடித்த இடமாக உருவாக்குவது என்பது கூட்டாக பணிபுரியும் இடத்தின் வெற்றிக்கான சூத்திரமாகும்.
பணியிடத்தில் மனநலம் என்பது உங்கள் கண்காணிப்பில் இருக்கும் நிறுவனத்தின் வெற்றிக்கான அடிப்படை என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம்.
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்
