ஹெட்ரிக் கோல் அடித்து மிரட்டிய ரொனால்டோ. அல் நஸ்ருக்கு இலகு வெற்றி
சவுதி அரேபிய உதைப்பந்தாட்ட லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற அப்ஹா கழகத்துக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் கோல் அடிக்க 8:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகு வெற்றி பெற்ற அல் நஸ்ர் கழகம் தரப்படுத்தலில் 2ஆம் இடத்தில் நீடிக்கின்றது.
உலக உதைப்பந்தாட்டத் தொடர்களில் தற்காலத்தில் பேசப்படும் தொடராக மாறியுள்ள சவுதி அரேபிய உதைப்பந்தாட்டத் தொடரின் நடப்பாண்டின் லீக் போட்டிகள் அந்நாட்டின் பல்வேறு மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று அல் நஸ்ர் கழகம் தமது 26ஆவது லீக் ஆட்டத்தில் பிரின்ஸ் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அரங்கில் அப்ஹா கழகத்தை எதிர்த்தாடியது.
இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ 11ஆவது நிமிடத்திலும், 21ஆவது நிமிடத்திலும் மற்றும் 41ஆவது நிமிடத்திலும் தொடராக 3 கோல்களை உட்செலுத்தி ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்து மிரட்டினார். அத்துடன் மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல் நஸ்ர் கழகம் 8:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
மேலும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல் தாய் கழகத்திற்கு எதிராக ஏற்கனவே ரொனால்டோ ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல் நஸ்ர் கழகம் 5:1 என வெற்றி பெற்றிருந்தது. அதற்கமைய கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல்களை அடித்துள்ளதுடன் அவருடைய கழகமான அல் றஸ்ர் கழகம் 26 போட்டிகளில் 20 வெற்றிகளுடன் 62 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் 2ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)
