விளையாட்டு

கிறீன் மற்றும் லயனின் உதவியுடன் நியூஸிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் கெமருன் கிறீனின் அசத்தல் துடுப்பாட்டமும் நதன் லயனின் துள்ளியமான சுழலும் கரம் கொடுக்க 172 ஓட்டங்களால் மிக இலகு வெற்றியைப் பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிக் கொண்ட ரி20 மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியவற்றில் பங்கேற்று வருகின்றது. இதில் முதலில் நிறைவுக்கு வந்த 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 29ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பித்திருந்தது.

இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி கெமரூன் கிறீன் பெற்றுக் கொடுத்த ஆட்டமிழக்காத 174 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.பந்துவீச்சில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணிn நதன் லயனின் சுழலில் சிக்கியது. இதனால் நியூஸிலாந்து அணி 179 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் க்ளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களைப் பெற்றார். நதன் லயன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

204 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு க்ளென் பிலிப்ஸ் சுழலில் நெருக்கடி கொடுத்தார். இதனால் தடுமாறிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுக்களையும் அழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது, துடுப்பாட்டத்தில் நதன் லயன் 41 ஓட்டங்களையும் , கெமரூன் கிறீன் 34 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்ளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் 369 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நயூஸிலாந்து அணிக்கு ரிச்சின் ரவீந்திர மற்றும் மிச்சல் ஜோடி சற்று ஆறுதல் கொடுத்த போதிலும் முதல் இன்னிங்ஸில் சுழலில் மிரட்டிய நதன் லயன் இந்த இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்த நியூஸிலாந்து அணி 196 ஓட்டங்களுக்குள் சுருண்டு போனது. துடுப்பாட்டத்தில் ரிச்சின் ரவீந்திர 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் நதன் லயன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதனால் 172 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டி மீதமிருக்க தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *