உள்நாடு

ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பிரதமர் பச்சைக்கொடி; NISD நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைக்க நடவடிக்கை

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை (NISD) இலங்கையின் அரச பல்கலைக்கழகமொன்றுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றி, அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

சமூகப்பணிக் கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சேவைத் துறைகளில் முக்கிய பங்காற்றிவரும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம், சுமார் 15 வருடங்களாக இந்நிறுவனத்தை அரச பல்கலைக்கழகமொன்றுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருவதுடன் அது சாத்தியப்படவில்லை, இதனை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதன் மூலம் சமூகப்பணிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில்முறை முன்னேற்றத்தை வலுப்படுத்தவும் முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்நிறுவனத்தின் கல்வித் தகைமைகளை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கச் செய்வதன் ஊடாக, பட்டதாரிகள் வெளிநாடுகளிலும் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், இதுவரை வெளியான மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அரச பல்கலைக்கழகமொன்றுடன் இணைப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்குத் தனது பாராட்டுக்களையும் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இதன்போது தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை வரவேற்றதுடன், இவ்விடயத்தை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அரச பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த முயற்சிப்பதாக உறுதியளித்தார்.

மேலும், இவ்விடயத்தில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்ட முயற்சியையும் பிரதமர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் மாணவர்களது நலன் கருதி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(ஊடகப்பிரிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *