பிரிவினாக்களில் கல்வி பயிலும் பிக்கு மாணவர்களுக்கு கொடுப்பனவு, ஏனைய சமய கல்வி பயிலும் மாணவர்களுக்கும்நாளாந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்; பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி கோரிக்கை
பிரிவினாக்களில் கல்வி பயிலும் பிக்கு மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பவை அதிகரித்துள்ள மட்டத்திற்கு இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்ளை கற்கும் மாணவர்களுக்கும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களது கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பிக்கு மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த நாளாந்த கொடுப்பனவை ரூபா 15 இலிருந்து ரூபா 50 ஆக அதிகரிப்பதாகவும் பிக்கு அல்லாத மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை ரூபா 15 இலிருந்து ரூபா 25 வரை அதிகரிப்பதாக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது நல்ல விடயம். ஆனால் ஏனைய சமூகங்களின் மார்க்கங்களை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் எவ்விதமான கொடுப்பனவு முன்மொழிவுகளும் முன்வைக்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த நாளாந்த கொடுப்பனவை இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களை அதற்கான நிறுவனங்களில் கற்கும் மாணவர்களுக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளில் சுமார் 15,000 முஸ்லிம் மாணவர்கள் மார்க்க கல்வியினை கற்றுக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று ஏனைய சமய நிறுவனங்களும் சமயக் கல்விக்காக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. எல்லா மாணவர்களுக்கும் இந்த நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் போதே சமத்துவம் பேணப்படும். நாட்டில் உண்மையான இன ஐக்கியம் உருவாகும்.
தேசிய மறுமலர்ச்சி ஒன்றை இலக்காகக் கொண்ட கலை கலாசாரத் துறையில் மேற்கொள்ளும் வலிமையான மாற்றத்தின் மூலமே இதனைச் செய்ய முடியும். பல்வகை கலாசாரங்களை ஏற்றுக் கொள்ளும் விடுதலையான விவேகமிக்க மனிதாபிமானத்துடன் கூடிய புதிய கலாசார ரீதியான மனிதனை உருவாக்குதல் தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இதுவே உங்களுடைய கொள்கையாக காணப்படுகின்றது.
2027 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதிகள் மற்றும் மருத்துவ சேவை அதிகாரிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சுகாதாரத்துறையில் எமது மக்களின் சுகாதார பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சுகாதார பணியாளர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோன்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவு நீதித்துறையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டமா அதிபர் மற்றும் சிரேஷ்ட அரச வழக்கறிஞர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக பாராட்டுகிறோம் ஆனால் அரச உயர் அதிகாரிகளுக்கு 100% வழங்கப்பட்ட நிலையில் கீழ்மட்ட ஊழியர்கள் தங்களின் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட வண்ணம் உள்ளனர். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் கீழ்மட்ட ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை எமக்கு கவலையளிக்கிறது. எனவே, கீழ்மட்ட ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அந்த வளர்ச்சியின் பயன் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும். இன்று நாட்டின் பெரும்பாலான குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனை வாழ்க்கைச் செலவுச் சுமையாகும். அத்தியவசிய பொருட்களின் விலைகள், போக்குவரத்துச் செலவுகள், உணவு, மருந்து மற்றும் கல்விச் செலவுகள் என பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள விலை உயர்வுகள் மக்களின் குடும்ப வரவு-செலவு திட்டத்தை பெரிதும் பாதித்துள்ளன.
அண்மையில் மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகள் மக்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது எரிபொருள் விலை உயர்வு வாகனங்களை பயன்படுத்துவோருடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. போக்குவரத்து, பொருள் விநியோகம், விவசாயம், மீன்பிடி மற்றும் உற்பத்தித் துறைகளின் செலவுகளையும் அது பாதிக்கிறது. இறுதியில் அதன் சுமை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் ஊடாக பொதுமக்களையே சென்றடைகிறது.
சம்பள உயர்வுகள் அல்லது வருமான அதிகரிப்புகள் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஈடு கொடுக்காத நிலையில் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றனர். மாதச் சம்பளத்தை பெரும் ஊழியர்கள், சிறு வியாபாரிகள், சுய தொழில் புரிவோர் என பல தரப்பினரும் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். இத்தகைய சூழலில் அரசாங்கத்திடமிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாராளுமன்ற பணியாளர்கள் தமது பாராளுமன்ற செயற்பாடுகளில் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருவதுடன் ஒவ்வொரு வருடமும் வரவு – செலவுத் திட்ட காலத்தில் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றனர். எனினும் பாராளுமன்ற பணியாளர்களின் விசேட கொடுப்பனவுகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படவில்லை என்பது குறித்து பாராளுமன்ற பணியாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
பாராளுமன்ற பணியாளர்கள் இரவு நேரங்களில் பணியாற்றி விட்டு வீடு செல்வதற்காக வழங்கும் ரூபா 750 கொடுப்பனவு 16 வருடங்களுக்கு முன்னர் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. எனவே நமது பாராளுமன்ற பணியாளர்களுக்கான விசேட கொடுப்பனவை 3000 ஆக உயர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தூர இடங்களில் இருந்து விசேட தேவைக்காக கடமை புரியும் பாராளுமன்ற பணியாளர்கள் இதனால் நன்மையடைவார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
