பிறந்தநாளில் கிடைத்த மறக்க முடியாத பரிசு; நனவான சம்மாந்துறை மாணவியின் கல்விக் கனவு
சம்மாந்துறையைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி நௌபார் பாத்திமா சபாவின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில், ஹாஷிம் உமர் பவுண்டேஷன் இலவச மடிக்கணினி ஒன்றை வழங்கியுள்ளது.
குறித்த மாணவியின் பிறந்தநாளான கடந்த 14ஆம் திகதி, கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பவுண்டேஷனின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த மடிக்கணினி வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கும் பவுண்டேஷனின் வேலைத்திட்டத்தின் 27ஆவது கட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் ஐந்து மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இதன்போது வழங்கப்பட்ட 135ஆவது மடிக்கணினியை நௌபார் பாத்திமா சபா பெற்றுக்கொண்டார்.
உயர்தரப் பரீட்சையில் இஸ்லாம், அரசியல் விஞ்ஞானம் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ள இவர், மடிக்கணினி வழங்குவதற்காக ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து மாணவர்களுள் ஒருவராவார்.
எனினும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்புக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதில் அவரது குடும்பத்தினர் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனை அறிந்த சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், மாணவிக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு தவறிவிடக்கூடாது என்ற நோக்கில், அவருக்கான போக்குவரத்து உதவியைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, முதற்கட்டமாக நம்பிக்கையாளர் சபையிடம் உதவி கோரப்பட்டதுடன், அங்கிருந்து கிடைத்த ஆரம்பகட்ட நிதியுதவி முழுமையான பயணச் செலவுக்குப் போதுமானதாக அமையவில்லை. இதனையடுத்து, நம்பிக்கையாளர் சபையினால் சம்மாந்துறை சதகா நலன்புரி அமைப்பிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்புக்கான போக்குவரத்து வசதியை அந்த அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
மடிக்கணினியைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல தடவைகள் கைகூடாத நிலையில், பல தரப்பினரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பினால் இறுதியில் மாணவியின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த மடிக்கணினியைத் தனது பிறந்தநாளன்றே பெற்றுக்கொண்டமை, மாணவிக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. அவரது உயர்கல்விப் பயணத்திற்குத் தேவையான முக்கிய உபகரணமொன்று இவ்வாறு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வசதியின்மை காரணமாகத் திறமையுள்ள மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் தடைப்படக்கூடாது என்பதையும், உரிய நேரத்தில் வழங்கப்படும் உதவிகள் அவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் துணையாக அமையும் என்பதையும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் இத்திட்டத்தின் ஊடாக இதுவரை 135 பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ கஜன், தினகரன் பத்திரிகையின் முகாமையாளர் யஸீர் மும்தாஸ், ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடகக் கண்காணிப்பு அதிகாரி ஜிப்ரியா இப்றாஹீம், SS Bridal Beauty Center & Academy (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் எம்.எப்.எப். சஸ்னா சபான், Ceylon Secret நிறுவனத்தின் பணிப்பாளர் பஸ்னா, சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ராதா மேத்தா, சந்திரிகா நிரோசன், இணைப்பாளர்களான ரிகாஸா, ஆகிப் மொஹமட், இஸ்ரத், படப்பிடிப்பாளர் ஹிஷாம் மௌலவி, ஆசிரியர் ஜே.எல். அப்துல் முனாப் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



(தில்சாத் பர்வீஸ்)
