சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் “அசிதிசி” புலமைப்பரிசிலை பெற்றார் ஊடகவியலாளர் றிபாஸ்
ஊடகவியலாளர்களின் தொழில்சார் அறிவு, கல்வித்தகமை மற்றும் தொழிநூட்பத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் றிபாஸுக்கு புலமைப்பரிசில் வளங்கி வைக்கப்பட்டது
கொழும்பு தபாலக தலைமைக்காரியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்தன உட்பட அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜயசிங்க, அமைச்சின் பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 25 வருடங்களாக ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் எம்.எப்.றிபாஸிக்கிற்கு, அவரது நீண்டகால ஊடகச் சேவையின் மத்தியில் கிடைத்துள்ள இந்தப் புலமைப்பரிசில் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் புதிய உற்சாகத்தையும் அளித்துள்ளது.
தனது 25 வருடகால ஊடகப் பயணத்தில் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்களை ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டு வருவதில் அவர் தொடர்ச்சியாகப் பங்களித்து வந்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர் எம்.எப். றிபாஸ் இருபத்தைந்து வருடங்களாக ஊடகத்துறையில் பயணித்து வரும் எனக்கு, இந்தப் புலமைப்பரிசில் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கின்றது. நீண்டகால ஊடகச் சேவைக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தைப் பெருமையாகக் கருதுகின்றேன். இது எனது எதிர்கால ஊடகப் பணிகளுக்கும் கல்வி மற்றும் தொழில்சார் மேம்பாட்டிற்கும் மேலும் ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன். இவ்வாய்ப்பை வழங்கிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும், பிரதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இவ்வாண்டுக்கான ‘அசிதிசி’ புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 161 ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் 20 வருடகால வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகூடிய எண்ணிக்கையிலான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்ட ஆண்டாக 2026ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
ஊடகத்துறையில் அறிவையும் திறனையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு, சமூகத்திற்கான பொறுப்புணர்வுடன் ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கு இத்தகைய வாய்ப்புகள் பெரும் ஊக்கமாக அமைகின்றன.



