உள்நாடு

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் புயல்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டலத் தொகுதி தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், இன்று (15) தாழமுக்கமாக வலுப்பெற்று, நாளையதினத்திற்குள் (16) மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் கடுமையான புயலாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு அகலாங்கு 5 – 15 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80 – 90 இடைப்பட்ட கடல் பிராந்தியங்கள்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பிராந்தியங்கள்.

ஆழ்கடலில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் மறு அறிவித்தல் வரை குறித்த பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மேற்கண்ட கடல் பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படகுகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் உடனடியாக பாதுகாப்பான கரையை நோக்கி அல்லது பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

வானிலை நிலவரங்களில் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தொடர்ச்சியான வானிலை அறிவித்தல்களுக்கு அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *