உள்நாடு

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர், பிரதிச் சபாநாயகரைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்

இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் டேவிஸ் மயர்ஸ் அண்மையில் கௌரவ பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் டேவிஸ் மயர்ஸை அன்புடன் வரவேற்றதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிவரும் நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, சவால்மிக்க காலப்பகுதிகளில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதிச் சபாநாயகர், பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (USAID) ஊடாக வழங்கப்பட்ட ஆதரவையும் பாராட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகமும் அமெரிக்க காங்கிரஸின் வரவுசெலவுத்திட்ட அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் அண்மைய அமெரிக்க காங்கிரஸ் விஜயம் தொடர்பில் குறிப்பிட்டார். அத்துடன், USAID ஊடாக பாராளுமன்றத்தின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் குறித்தும் அவர் நினைவுகூர்ந்தார்.

இலங்கைக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை டேவிஸ் மயர்ஸ் இதன்போது உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்றக் கட்டடத்தின் அழகியல் மற்றும் அதன் கட்டடக்கலை முக்கியத்துவம் குறித்தும், இலங்கையின் இயற்கை அழகு குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது சிநேகபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டேவிஸ் மயர்ஸ் பாராளுமன்றக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் மற்றும் அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *