உள்நாடு

அஹதிய்யா மத்திய சம்மேளன சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அஷ்ஷெய்க் பளீல் (நளீமி)ஆற்றிய உரை

அஹதிய்யா மத்திய சம்மேளனம் கடந்த சனிக்கிழமை (07.11.2026) கொழும்பில் நடாத்திய சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அஷ்ஷைக் பளீல் நளீமி பங்குகொண்டு ஹதீஸ் துறை பேரரசர் இமாம் புகாரி(ரஹ்) சம்பந்தமாக உரையொன்றை நிகழ்த்தினார்.

இமாம் புகாரியினால் தொகுக்கப்பட்ட ஸஹீஹுல் புகாரியை மையப்படுத்தி ஹதீஸ் டிப்ளோமா பாடநெறியொன்றை அஹதிய்யா மத்திய சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் நடாத்தியிருந்தது அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அஷ்ஷைக் பளீல் விசேட பேச்சாளராகக் கலந்துகொண்டார்.

அஹதிய்யா சம்மேளனம் நடாத்திய இந்த பாடநெறியில் ஸஹீஹுல் புகாரி கிரந்தத்தில் மொத்தமாக 7563 ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து 875 ஹதீஸ்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zoom மூலமாக கடந்த சுமார் ஒரு வருடகாலமாக இப்பாடநெறியில் 212 பேர் கலந்துகொண்டாலும் அவர்களில் கிரமமாக, உற்சாகமாகக் கலந்து கொண்ட 163 பேருக்கு இன்று டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அஷ்ஷைக் பளீல் பேசும்போது கடந்த காலங்களில் ஹதீஸ்களை திரட்டுதல், அவற்றை பகுப்பாய்வு, செய்தல், மிவுமே நம்பகரமானவற்றை மட்டுமே ஏற்றல், பதிவுசெய்தல் போன்ற உண்ணத பணிகளில் பல இமாம்களும் ஈடுபட்டிருந்தாலும் அவர்களில் முதன்மையானவராக இருந்த இமாம் புகாரி வாழ்வு பணிகள் தியாகங்கள் பற்றிய விரிவான கருத்துக்களை முன்வைத்தார்

அவரது ஆழமான ஈமான், தக்வா, ஹதீஸ்களின் மீதான பற்று, அவற்றை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற பேரார்வம்,அவற்றிற்காகச் செய்த தியாகங்கள் என்பன அளப்பரியவை என்று குறிப்பிட்ட அவர் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அல்குர்ஆனுக்கு அடுத்த கிரந்தமாக மதிக்கப்படும் நிலையில் ஸஹீஹுல் புகாரி உள்ளதாயின் அதன் நம்பகத் தன்மையையும் இஸ்லாமிய அறிஞர்கள் அது பற்றிக் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அத்தகைய கிரந்தத்தை மட்டுமல்ல ஏனைய ஹதீஸ் கிரந்தங்களையும் கற்பதும் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதும் எம் அனைவரதும் கடமையாகும்.

ஹதீஸ் துறை பேரரசர் இமாம் புகாரி அவர்களைப் பற்றிய வரலாற்றை எமது இளம் பரம்பரைக்குக் கற்பிக்க வேண்டும். அவர் சிறந்த முன்மாதிரியாவார்.

அஹதிய்யாவின் இறுதிப் பரீட்சையில் ‘அகீதா மஸாதிருஸ் ஷரீஆ’ பாடத்திட்டத்தில் ‘ஷிஹாஹுஸ் ஸித்தா’ எனப்படும் ஆறு நம்பகரமான ஹதீஸ் கிரந்தங்கள் பற்றிய, அவற்றைத் தொகுத்த மேதைகள் பற்றிய பகுதி உள்ளடக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க தாகும். அதேபோல பாடசாலைகளது இஸ்லாம் பாடத்திலும் அது இணைக்கப்பட்டுள்ளது.

கியாமத் வரை யாரெல்லாம் ஒரு குறிப்பிட்ட அறிவின் மூலம் பயனடைவார்களோ அவர்களுக்குக் கிடைக்கும் அதே அளவு நன்மைகள் அந்த அறிவிற்கு வித்திட்டவருக்கும் கிடைக்கும் என்பது தான் ‘பயன் தரும் அறிவு’ என்பதன் விளக்கமாகும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *