ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு; இம்மாதம் 22, 23, 24இல் காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு கிரிக்கெட் திருவிழா
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் காத்தான்குடி மத்தியக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் காத்தான்குடியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப்போட்டியைச் சிறப்பாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருகட்டமாக, போட்டிகள் நடைபெறவுள்ள காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்குச் சென்ற உயர்மட்டக் குழுவினர், அங்குள்ள கள நிலைமைகளை நேரில் பார்வையிட்டு விரிவான ஆய்வுகளை நேற்று (10) மேற்கொண்டனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் மற்றும் கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நேரடி ஆய்வு நடைபெற்றது. இதில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், போட்டியில் பங்கேற்கவுள்ள விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மைதானத்தின் தற்போதைய நிலைமை விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனைச் சீரமைத்தல் மற்றும் தேவையான திருத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுதல் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இரவு நேரப் போட்டிகளை நடத்துவதற்கான மின்னொளி வசதிகளை ஏற்படுத்துதல், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், நடுவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி உறுதிப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த ஆய்வின்போது அடையாளம் காணப்பட்ட திருத்தப் பணிகள் மற்றும் ஏனைய அவசர ஏற்பாட்டுப் பணிகளை உரிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மிகச் சிறந்த முறையில் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
காத்தான்குடி பிரிவிலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பங்கேற்புடன் இம்மாதம் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்பிரம்மாண்டமான கிரிக்கெட் சுற்றுப்போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்தியக் குழுவினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






(ஊடகப்பிரிவு)
