2027 ஹஜ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை
2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ ஹஜ் ஒப்பந்தத்தில் இலங்கையும் சவூதி அரேபியாவும் கையெழுத்திட்டுள்ளன. சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்ற வருடாந்த ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சியின் போது, திங்கட்கிழமை (நவம்பர் 9) இருதரப்புக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இலங்கை தூதுக்குழுவின் தலைவரான மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, இலங்கை யாத்ரீகர்களுக்கான புனிதப் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், ஹஜ் நடைமுறைகளை மிகவும் இலகுவாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை தூதுக்குழு வலியுறுத்தியது.
பிரதி அமைச்சர் முலப்பர் தலைமையிலான தூதுக்குழுவினர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்பீக் பௌசான் அல்-ரபியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன், 2027 ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இலங்கை தூதுக்குழுவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார், ஜித்தாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரி (Consul General) நீதியரசர் எம்.டி. முஹம்மது லப்பார், ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் உறுப்பினர் ருஷ்டி காலித் மற்றும் ஜித்தா துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
மேலும், செயல்பாட்டுத் தரங்களை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு மாநாட்டுடன் இணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முயற்சியின் கீழ், சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு நடத்திய சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளில் இலங்கை முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் தனியார் ஹஜ் முகவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பேர் கொண்ட கூட்டு தூதுக்குழுவும் கலந்துகொண்டது.





