உள்நாடு

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் / பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அங்குள்ள கட்டிடங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனக்கூறி, இடைக்காலக் குத்தகை ஒப்பந்தங்களைத் தயாரித்து, அதைத் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்காக மூன்றாம் தரப்பினருக்கு முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணிப்பாளர் சபையின் முறையான அனுமதியின்றி அக்கட்டிடத்தைச் புனரமைப்பு செய்வதற்காக இளைஞர் சேவை மன்றத்தின் நிதியிலிருந்து 13 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முறையற்ற வகையில் பணம் செலுத்துவதற்கு வழிவகுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 51 லட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *