வெகு விமரிசையாக இடம்பெற்ற அஷ்ஷெய்க் அப்துல் நாசிரின் நபி புகழ்பாடும் “அர்ரபீ (B)” நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதியும், கவிஞரும், எழுத்தாளரும், வளவாளரும் மற்றும் பன்னூல் ஆசிரியரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச்செயலாளருமான எஸ். அப்துல் நாசிர் அவர்களின், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ்பாடும் “அர்ரபீ (B)” கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளரும், மீடியா லிங்க் அமைப்பின் தவிசாளருமான எம்.எஸ்.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அஹ்ஸன் மரிக்கார் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், இந்நிகழ்வில் நூலாசிரியர் அறிமுக உரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஐ.எம். தாலிப் ஆற்றியதுடன், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுவின் தலைவரும், கவிஞரும், ஆய்வாளருமான மௌலவி ஹிஷாம் ஃபத்தாஹி நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஃபாயிஸ் முஸ்தபா, கலீபதுல் குலபா அஷ்செய்ஹ் முஹம்மத் ஸூஹூர் பாரி, அகில ஆலங்கை ஜம்இய்யதுல் உலமா,ஷரீஆ கவுன்சில், அரபுக்கல்லூரிகளின் முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் உட்பட பல பிரமுகர்களும், இலக்கியவாதிகளும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான பஸ்ஹான் நவாஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவின்போது நூலாசிரியர் எஸ். அப்துல் நாசிர் அவர்களுக்கு ” செரன்தீபின் கவிஞர்” எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











(பேருவலை பீ.எம்.முக்தார்)
