உள்நாடு

விகாரமகாதேவி பூங்காவில் நான்காவது நாளாக தொடரும் போராட்டம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (19) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

அன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்தில் தற்காலிகக் கொட்டகையொன்றை அமைக்க முயற்சித்தபோது, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை குறித்த இடத்திலிருந்து வெளியேறப் போவதில்லை எனச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியிருந்த பௌத்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகத் தெரிவித்த பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிலேயே தங்கியிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *