உள்நாடு

தீகவாபி மக்களின் காணிப்பிரச்சினைக்குதீர்வு காண 14,15 இல் நடமாடும் சேவை; பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்திலுள்ள தீகவாபி பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடமாடும் சேவை எதிர்வரும் 14ஆம், 15 ஆம் திகதிகளில் அட்டாளைசேனை பிரதேச செயலாகத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்த காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராய்ச்சி, காணி மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்கள் விரைவில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சையின் ஊடாக நிரப்பப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்றது. இச்சமயம் தீகவாபி மக்களின் காணிப் பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதிருப்பது குறித்தும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள காணி உத்தியோகத்தர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டியதன் அவசியத்தையும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்தே காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராய்ச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மேலும் குறிப்பிடுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள எல்.ஆர்.சி காணிகள் மற்றும் தீகவாபி கிராம மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். காணி உத்தியோகத்தர் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமையால் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வருகின்ற காணி தொடர்பான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த காணி ஆணையாளர் நாயகம் திரு சந்தன ரணவீர ஆராச்சி, குடியேற்ற உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேற்படி போட்டிப் பரீட்சையை நடத்தி அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரிகளைத் தெரிவுசெய்து அம்பாறை காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இச்சமயம் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி, குடியேற்ற உத்தியோகத்தர் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு வேறு அலுவலகங்களிலிருந்து தற்காலிக அடிப்படையில் குடியேற்ற உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்கவுக்கு அமைச்சர் லால் காந்த பணிப்புரை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *