உள்நாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் சமாதான சர்வதேச மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் சமாதான சர்வதேச மாநாடு அண்மையில் (27) சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற இம்மாநாடு, பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற மாநாடாகும்.

குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை மையப்படுத்தி, உலக சமாதானம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம், பெண்களின் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக சமத்துவம் உள்ளிட்ட முக்கிய சமூக விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

மங்கள விளக்கேற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், வரவேற்பு நடனமாக பரதநாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரை, சிறப்புரைகள், விழிப்புணர்வு உரைகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்வில் சிறப்பிடம் பெற்றன.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பரதீபராஜா, பொறுப்பதிகாரியும், காவல் ஆய்வாளருமான சிவானந்தம் நிதர்சன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பேராசிரியர் பொன். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

“போதைப்பொருள் இல்லாத தாய்நாடு, எதிர்காலத்தின் சுபீட்சம்”
என்ற தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருள் இல்லாத தாயகத்தை உருவாக்குவதன் அவசியம் தொடர்பாகவும் மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதுடன், ஆரோக்கியமானதும் பாதுகாப்பானதுமான சமூகத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேவேளை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பான விடயங்களும் வலியுறுத்தப்பட்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதும், பெண்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் இலங்கைத் தலைவர் ஏ.ஆர். அமீர்கான் தலைமை தாங்கினார். நிகழ்வை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் அப்துல் பரீத் ஆரிப் ஒருங்கிணைத்திருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா மற்றும் பொறுப்பதிகாரியும், காவல் ஆய்வாளருமான சிவானந்தம் நித்தர்சன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிறப்புரைகளை வழங்கினர்.

நிகழ்வின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, சமூக மற்றும் மனிதநேய சேவைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருபவர்கள் பல்வேறு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் வகையில் “தேசத்தின் மனிதன்” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டதுடன், மனிதநேயம் மற்றும் சமூக சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்கு “மனித புனிதர்” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியுடன் புதிதாக இணைந்து செயற்பட்டு வரும் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே, “வாழும் போதே வாழ்த்துவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் மூத்த உறுப்பினர் குபேர லிங்கம் ஐயா அவர்களின் நீண்டகால சமூக மற்றும் மனிதநேய சேவைகளைப் பாராட்டி, சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

அவரைக் கௌரவிக்கும் வகையில் 50 ரூபாய் பெறுமதியான தபால் முத்திரையும் வெளியிடப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணக் கல்விசார் ஊழியர்கள் சார்பில் குபேர லிங்கம் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது.

சமூகத்திற்கும் மனிதநேயப் பணிகளுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இடம்பெற்ற இந்தக் கௌரவிப்பு, நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் நிர்வாகிகள், பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சமூக சேவையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

“போதை இல்லாத தாயகம், எதிர்காலத்தின் சொர்க்கம்” மற்றும் “பெண்களின் பாதுகாப்பு, சமூகத்தின் பொறுப்பு” “பெண்களின் உரிமைகள் – மனித உரிமைகள்” என்ற கருத்துக்களை முன்னிறுத்திய இம்மாநாடு, உலக சமாதானம், மனிதநேயம், மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் தொடர்பான முக்கிய செய்திகளை சமூகத்திடம் கொண்டு சென்றது.

நிகழ்வின் நிறைவில், சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் இயக்குநரும், யாழ்ப்பாண முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சமாதானத் தூதுவருமான அப்துல் பரீத் ஆரிப் நன்றியுரை வழங்கினார்.

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில்
பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து, சமாதானம், மனித உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் இல்லாத எதிர்காலம் உள்ளிட்ட முக்கிய சமூக நோக்கங்களை முன்னிறுத்திய நிலையில், பல்வேறு கௌரவங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நிறைவடைந்தது.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *