ரேடியோ சிலோன் பொற்கால கலைஞர் ‘இசைக்கோகிலம்’ நூர்ஜஹான் மர்சூக்கின் மறைவு, இலங்கை முஸ்லிம் ஊடக கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்

- அ.இ. இளம் எழுத்தாளர் சம்மேளனம் அனுதாபம்
“இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ‘ரேடியோ சிலோன்’ இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பணியாற்றிய மூத்த கலைஞர்களில் ஒருவரான பிரபல இஸ்லாமிய கீதப் பாடகி ‘இசைக்கோகிலம்’ நூர்ஜஹான் மர்சூக்கின் மறைவு, இலங்கை முஸ்லிம் ஊடக கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என, அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் அதன் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
அ.இ. இளம் எழுத்தாளர் சம்மேளனத் தலைவர் ‘கலையமுதன்’ எம். நிஜாமுதீன், பொதுச்செயலாளர் ‘கலைப்பிரியன்’ மௌலவி ஐ.ஏ. காதிர் கான் ஆகியோர் இணைந்து தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
“வானொலி என்பது, மக்களின் ஒரே தொடர்பு சாதனமாக இருந்த காலகட்டத்தில், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை, முஸ்லிம் சமூகத்தின் குரலாகத் திகழ்ந்தது.
மார்க்க அறிவு, பண்பாடு, கலை, இலக்கியம், பெண்கள் மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகள் என, பல துறைகளில் அந்தச் சேவை ஆற்றிய பங்கு மகத்தானது.
அந்தப் பொற்காலத்தில் கலைஞராக இணைந்து, தனது குரலாலும், கலைத் திறமையாலும் ஆயிரக்கணக்கான நேயர்களின் இதயங்களை வென்றவர். அனைவருடனும் மனம் நோகாது கதைப்பவர் நூர்ஜஹான் மர்சூக்.
இஸ்லாமிய சேவையின் நிகழ்ச்சிகளுக்கு அவர் வழங்கிய பங்களிப்பு, அன்றைய முஸ்லிம் பெண் கலைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது.
வானொலி நாடகங்கள், கலந்துரையாடல்கள், மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கலை இலக்கிய நிகழ்வுகள் என, பல வடிவங்களில் அவரது குரல் ஒலித்தது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்களின் கல்வி, ஒழுக்கம், குடும்ப வாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அவரது பங்கு மறக்க முடியாதது என, மூத்த நேயர்கள் பலர் இன்றும் நினைவு கூருகின்றனர்.
கலைஞராக மட்டுமின்றி, சிறந்த குடும்பத் தலைவியாகவும் அவர் திகழ்ந்தார். அவரது புதல்வி ரிஹானா மர்சூக், கொழும்பு மரியம் மகளிர் கல்லூரியின் அதிபராக சமூகப் பணியாற்றி வருவது, அவர் வழங்கிய வளர்ப்புக்கு சிறந்த சான்றாகும்.
ரேடியோ சிலோனிலிருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாறிய பயணத்தில், இஸ்லாமிய சேவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மூத்த தலைமுறை கலைஞர்களில் ஒருவரை இன்று நாம் இழந்துள்ளோம்.
கடந்த வாரம் முஸ்லிம் சேவை நாடக ஒலிப்பதிவுக்காக கலையகத்துக்கு வருகை தந்திருந்தார். எல்லோருடனும் அன்பொழுகப் பேசியதும் எமது நினைவுக்கு வருகிறது. அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
அன்னாரது குடும்ப உறவுகளுக்கு, எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( ஐ. ஏ. காதிர் கான் )
