உலகம்

மக்கா புனித ‘ஹரமின்’ மூத்த முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்

மக்கா புனித ‘மஸ்ஜிதுல் ஹரமின்’ மூத்த முஅத்தின்களில் ஒருவரான ஷேக் இப்ராஹிம் பின் ஆதில் அல்-மதனி நேற்று (21) அதிகாலை, அன்னாரின் 51 ஆவது வயதில் காலமானார்.

அவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், நேற்று (21) அதிகாலை ‘மஸ்ஜிதுல் ஹரமில்’ ஃபஜ்ர் தொழுகைக்கான முதல் அதானை வழங்கியிருந்தார். இதுவே அவரது இறுதி அதானாகவும் அமைந்திருந்தது.

‘ஹரம் ஷரீஃபின்’ முதன்மை முஅத்தின்களில் ஒருவராகப் பணியாற்றிய ஷேக் இப்ராஹிம் அல்-மதனி, தனது இனிமையான குரலாலும் ‘ஃபஜ்ர் அதான், பெருநாள் தக்பீர்கள்’ மற்றும் இமாமின் குரலைத் தொடர்ந்து உரத்த குரலில் ஒலிக்கச் செய்யும் ‘தப்லீக்’ பணியாலும் அறியப்பட்டவர்.

மதீனாவில் பிறந்து வளர்ந்த அவர், தனது 15 ஆவது வயதிலிருந்து அதான் வழங்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டு (2017–2018) மக்கா பெரிய பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினாக நியமிக்கப்பட்டார்.

அவரது ஜனாஸா தொழுகை, நேற்று (21) அஸர் தொழுகைக்குப் பின்னர் ‘மஸ்ஜிதுல் ஹரமில்’ நடைபெறவுள்ளதாகவும், பின்னர் ‘அல்-முஅல்லா’ மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘அல்லாஹ்…! அவருக்கு மஃபிரத் அருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக…!’

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *