உள்நாடு

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியா ஜும்ஆ பள்ளிவாசலில்காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா ஸாவியா ஜும்ஆ பள்ளிவாசலில் வருடாந்தம் நடைபெறும் காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி (22.09.2026)செவ்வாய்க் கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறும்.

அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாலருமான கலீபதுஷ்ஷாதுலி அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ஏ.எச். இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்வுக்கு தலைமை வகிப்பார்.

காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் அல்குத்புல் அக்தாப் கௌதுல் அஹ்லம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு இம் மஜ்லிஸ் இடம்பெறுகிறது.

கடந்த 13ம் திகதி (13.09.2026) அஸர்தொழுகையைத் தொடர்ந்து இந்த மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 09 நாட்கள் காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் ஓதப்பட்டு எதிர்வரும் 22ம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை தமாம் பெரிய கந்தூரியுடன் நிறைவு பெறும். 21ம் திகதி இரவு திக்ர் மஜ்லிஸும், புனித அல்குர்ஆன் தமாமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமாம் நிகழ்வில் ஐதுரூஸியதுல் காதிரிய்யா தரீக்காவின் கலீபாவும் பிரபல உலவியலாளருமான அல்ஹாபிழ் மௌலவி எம்.ஸீ.எம். முஸ்தகீம் (நஜாஹி) விஷேட சொற்பொழிவாற்றுவார்.

மேற்படி ஸாவியாவின் இமாம்களான மௌலவி முகத்தமுஷ்ஷாதுலி எம்.டப்.எம். பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி), மௌலவி எம். இக்ராம் (நுலாரி), ஹாபிஸ் முஹம்மத் இல்ஹாம் ஆகியோர் தினமும் நடைபெறும் மனாகிப் நிகழ்வுக்கு தலைமை தாங்கி வருகின்றனர்.

தமாம் நிகழ்வில் கலீபாக்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், மேற்படி தர்கா ஸாவியா மஸ்ஜிதின் நிர்வாகிகள், இஹ்வான்கள் என பலரும் கலந்து கொள்வர்.

குட்டிமலை ஜெலாலிய்யா ஜும்ஆ பள்ளி வாசல் பற்றி,வரலாறு கூறும் சில வரிகள்

களுத்துறை மாவட்டத்தின் பேறுவளைத் தொகுதியில் சாதுலிய்யா கோட்டையென வர்ணிக்கப்படும் சீனன்கோட்டையிலே இருக்கின்ற இந்தக் குட்டிமலை ஜெலாலிய்யா ஸாவியா வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மஸ்ஜிதாகும். கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இப்பள்ளிவாசலில் இறை நேசர்களான ஷேஹ் ஜெமாலுத்தீன் . ஷேஹ் ஜெலாலுத்தீன் ஆகியோர் இங்கே அடங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இந்த ஊருக்கே கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதவேண்டும் . இப்பள்ளி வாசலை 4 தலைமுறையினர்களுக்கும் மேலானவர்கள் பரிபாளித்தும் வந்துள்ளனர் .

சீனன்கோட்டைக்குட்பட்ட 16 பள்ளிவாசல்களிலும் இப்பள்ளிவாசல் ஒன்றே ஸியாரங்களைக் கொண்டுள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளிவாசலின் வரலாற்றைச் சற்று புறட்டிப்பாத்தால் ஆரம்பத்தில் இப்பள்ளிவாசலுக்கு கருகாமையில் ஒரேயொரு மண்வீட்டைத் தவிர மற்றும்படிக்கு மனித சஞ்சாரமில்லாத சீனன்கோட்டையின் ஒரு பகுதியாகவே இன்று போல் அன்றும் விளங்கிய குட்டிமலையெனும் இவ்விடம். அடர்ந்த காடுகளால் சூலப்பட்டு அத்துடன் வளைந்த கோடுகளைப் போன்ற ஒரு ஒத்தையடிப்பாதையொன்றும் இப்பள்ளிவாசலுக்குகருகாமையில் இருந்துள்ளது. அன்றைய கால கட்டத்தில் அப்பாதையால் அதிகமானவர்கள் போக்குவரத்து மேற் கொள்ளாவிட்டாலும்கூட., அப்பாதையை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே பயன்படுத்தியிருக்கின்றார்கள் .

  • மலைத்தோட்டம் என்ற இடத்துக்கு கிழக்காக சற்று தள்ளியே இப்பள்ளிவாசல் சிறு மலைப் பாங்கான இடத்தில் அமையப் பெற்றுள்ளதால் இப்பள்ளிவாசலுக்கு “குட்டிமலை”ப் பள்ளிவாசல் எனும் பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் கராமாத்துக்கள் நிகழ்ந்த இடமாகவும், நிகழும் இடமாகவும் விளங்குகின்றது , இதன் யதார்த்தத்தை உணர்ந்தவர்கள் இன்னும் அக்கம் பக்கத்தில் வசிக்கின்றார்கள் . இப்பள்ளிவாசல் அமைந்துள்ள காணி மலைத்தோட்டத்தைச் சேர்ந்த மத்திச்சம் அப்பா எனும் சுல்தான் மரிக்கார் என்பவருக்கும் அவர் குடும்பத்தினர்களுக்குமே சொந்தமானதாகும். இப்பகுதியில் அனேகமான காணிகளுக்கு மத்திச்சம் அப்பா குடும்பத்தினர்களே சொந்தக்காரர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். இப்பள்ளிவாசலுக்கு அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இக்காணியின் விஸ்தீரணத்தை கொண்டு இதைப் புரிந்து கொள்ளலாம் . ஒரு நாள் மத்திச்சம் அப்பா அவர்களின் கனவில் இருவர் வந்து நாங்கள் இருவரும் ஷேஹ் ஜெமாலுத்தீன். ஷேஹ் ஜெலாலுத்தீன். என தம்மை அறிமுகம் செய்து.தற்போது ஸியாரம் இருக்கின்ற இடத்தைக் குறிப்பிட்டு இங்கே நாங்கள் அடங்கப்பட்டிருக்கின்றோம் . எங்கள் இடத்தில் ஒருவர் வந்து பராமுகமாக நடந்து கொள்கிறார் என்று கூறவே, தூக்கம் களைந்து கண் விழித்து ப் பார்த்ததும் அதிகாலை 3.00 மணியாக இருந்ததாம் மறுகனமே தன்மைத்துனரின் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி நடந்த சம்பவத்தை அவரிடம் கூறி போய் பார்ப்போமென மைத்துனரை அழைத்திருக்கின்றார். மின்சார வசதிகளற்ற அக்கால கட்டத்தில் அழைக்கப்பட்டவர் காரிறுளைக் காரணம் காட்டி தயங்கியதால் இருவரும் பொழுது விடிந்ததும் குறிப்பிட்ட இடத்தைப்போய் பார்த்திருக்கின்றார்கள். அப்போது கனவில் வந்து கூறப்பட்ட இடத்தில் யாரோ ஒருவர் ஏதோ ஓரிரு மரம். செடிகளின் இலை குழைகளை ஓரிடத்தில் கூட்டி சேகரித்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது . அந்த இலைகுழைகளை அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அது மூலிகை வகையைச் சேர்ந்தவையென்பதை புரிந்து கொண்டு. அந்த இடத்துக்கு வந்து சென்றிருப்பவர். அக்காலத்தில் மிருக வைத்தியராகத் திகழ்ந்த இமாம் அலி காக்கா என்பதை தெரிந்து கொண்டார்கள். பின்னர் அந்த இடத்திலுள்ள அடர்ந்த காடுகளையும், கல்முற் செடிகளையும் அப்புறப்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்யத் தயாராகும்போது பசுமையற்ற இஸ்த்திரத்தன்மையுள்ள அம்மேட்டு நிலத்திலே இருசிறு நெடுங்கீறல்கள் போன்ற இரு வெடிப்புக்களையும் , அக்கீறல்களோடு சேர்ந்திருந்த இரு பெரும் கற்களையும் கண்டு ஆச்சரியப் பட்டவர்களாக தாம்மேற்கொள்ள வேண்டிய ஏனைய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அப்புறம் அக்கீறல்களின் அடையாளம் இப்பள்ளிவாசலில் அடங்கப்பட்டிருக்கும் இறை நேசர்களான ஷேஹ் ஜெமாலுத்தீன். ஷேஹ் ஜெலாலுத்தீன் ஆகியோர்களது அடக்கஸ்தளமென உறுதி செய்யப்பட்டு , உடனடியாக களிமண்ணைக் கொண்டு ஒரு சிறு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அன்றிலூருந்து இப்பள்ளிவாசலை பராமரித்துப் பரிபாளிக்கும் சகல பொறுப்புக்களையும் மத்திச்சம் அப்பாவெனும் சுல்தான் மரிக்காரும் , அவர் குடும்பத்தினர்களுமே மேற்கொண்டனர் . சுல்தான் மரிக்கார் அவர்களுக்கு உதவியாக அவர் குடும்ப உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் அப்துல் வாஹித் ஹாஜியார், முஹம்மது இப்ராஹீம், உதமான் லேக்கன், பரீத் ஹாஜியார் , முஹம்மது ஹாஷீம், முஹம்மது இஸ்மாயில் , முஹம்மது ஸெலாஹுத்தீன் , டொக்டர் பஷீர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களில் ஒரு சிலராவர். குட்டிமலையை அன்மித்த பிட்டவளையில் 1935 ஆண்டில் அல்-மிர் அத்துஷ்ஷாதுலிய்யா என்ற ஸாவியாவை நிறுவியவரும், தென்னிந்திய அதிராம் பட்டனத்தைச் சேர்ந்தவரும் எல்லோறாலும் அன்பாக செய்குனப்பா என்று அழைக்கப்பட்டவருமான செய்குனா (ரஹ்) அவர்களும்கூட அக்காலத்தில் அடிக்கடி குட்டிமலைப் பள்ளிவாசலுக்கு வந்து “கல்வத்” எனும் இறைதியானத்திலும் இருந்திருக்கிருக்கின்றார்கள் . மற்றும். அதிரை, கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களிலிருந்தும் மக்கள் ஸியாரத்தை தரிசிக்க வந்திருப்பதாகவும் ஒரு குறிப்பு கூறுகின்றது . மேலும் 1962க்கு பிறகே இப்பள்ளிவாசலைச் சுற்றி வீடுவாசல்கள் தோன்றி, மக்கள் பெருகின. இப்பள்ளிவாசலுக்கு சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் ஜெமாத்தாகவுள்ளது. இந்நிலையில் பள்ளிவாசலில் இடநெருக்கடியேற்பட்டதைத் தொடர்ந்து 1970க்குப் பிறகு. அதுவரைக்குமிருந்த பழைய பள்ளிவாசலை உடைத்துவிட்டு இப்போதுள்ள பள்ளிவாசலை 1973ல் கட்டி முடித்து. தொழுகைக்காக திறந்து வைக்கப்பட்டது. தற்போது பள்ளிவாசலுக்குட்பட்ட ஜெமாத்தார்களின் தொகையதிகரிப்பையடுத்தே 22.04.2005 அன்று முதல் இப்பள்ளிவாசலை ஜும்ஆ பள்ளிவாசலாக்குவது பற்றி அவசர அவசியமாக சீனன்கோட்டைப் பள்ளிச் சங்கத்தினர்கள் எடுத்த நியாயமான நடவடிக்கையின் பிரதிபலன்தான் இப்பள்ளிவாசல் ஜும்ஆ பள்ளியாக பரிணமித்துள்ளது. மேலும், இப்போதுள்ள நிலையிலும் பள்ளிவாசலின் இடநெருக்கடியைக் கருத்தில்கொண்டு இப்பள்ளிவாசலின் விஸ்த்தீரணத்தை அடிப்படையாக வைத்து மற்றுமொரு புனர்நிர்மானத்துக்கான அடிக்கல் நடும் வைபவமும் அன்றைய தினம் இடம்பெற்ற அதன் நிமித்தம் தற்போது புனர் நிர்மாண வேலலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது .
  • .அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு – சீனன் கோட்டை குட்டிமலையைச் சேர்ந்த எழுத்தாளர் துர்ரியாஸ் இல்யாஸ் எழுதிய வரலாற்றுத் தொகுப்பு கட்டுரை யிலி ருந்து தொகுக்கப்பட்டது.

(பேருவளை பீ.எம். முக்தார்
)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *