முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது நிலவும் நோயாளர் நெரிசலைக் குறைப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. இந்த புதிய வார்டு தொகுதி பல நவீன வசதிகளைக் கொண்டிருப்பதுடன், மின் தூக்கிகள் ,குளிரூட்டி தொகுதிகள், அவசர மின்சாரக் கட்டமைப்புக்கள், தீயணைப்பு கட்டமைப்புகள் மற்றும் குழாய் மூலமான மருத்துவ எரிவாயு விநியோக கட்டமைப்பு (Piped medical gas supply system) போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படும்.
தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் குறைப்பதும், 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவது மட்டுப்படுத்தப்படும்.
நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, புதிய வார்டு தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மருத்துவமனை ஊழியர்களுடன் சுமுகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ:
எமது நாட்டின் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மிகக் குறைந்த படுக்கை வசதிகளைக் கொண்ட பொது வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’யை உருவாக்குவதில், இந்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதற்கேற்ப இந்த வைத்தியசாலைக்குத் தேவையான கட்டட வசதிகளை வழங்குவதோடு, தேவையான உபகரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்போம். எமது புதிய ஆட்சேர்ப்புகளுக்கு ஏற்ப, அவசியமான ஊழியர்களை முறையாக வழங்குவோம். மூன்றாம் நிலை வைத்தியசாலையென்ற வகையில் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பயிற்சி பெறும் வைத்தியர்களை இணைத்துக் கொள்வது மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, வெளிநாட்டுப் பயிற்சியை நிறைவு செய்து திரும்பும் விசேட வைத்தியர்களை வைத்தியசாலைகளுக்கு வழங்கும் போது, முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு நாம் முன்னுரிமை அளிப்போம்.
இந்த வைத்தியசாலையின் படுக்கை கொள்ளளவை அதிகரிப்பதற்கான உடனடித் தேவை உள்ள நிலையில், நான்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 600 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா:
இந்தியா-இலங்கை இடையிலான நீண்ட கால நட்புறவின் ஓர் சான்றாக இந்தத் தனித்துவமான நிகழ்வு விளங்குகிறது. மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண்டின் இறுதியை நெருங்கும் வேளையில், அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் இது மீண்டும் உணர்த்துகின்றது.
இலங்கை மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக இந்தியா தொடர்ந்து ஒரு நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது. அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை” என்ற வெளியுறவுக் கொள்கையில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உண்மையில், நமது உறவு வெறும் அயல் நாடு என்ற நிலையை விட மேலானது. புவியியல், பாரம்பரியம் மற்றும் பிரிக்க முடியாத வரலாற்று ரீதியான உறவினால் பிணைக்கப்பட்ட நாகரிக இரட்டையர்களாக இதனை நாம் கருத முடியும்.
சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு என்பது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையின் ஒரு முக்கியத் தூணாகும். 1990 சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் சேவை தொடக்கம் நாடளாவிய ரீதியிலான மருத்துவ உட்கட்டமைப்புத் திட்டங்கள் வரை நமது இரு நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த முயற்சிகள் இலங்கை மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்
யுத்த மோதல்களுக்கு மத்தியில் பல இன்னல்களை எதிர்கொண்ட மக்களுக்கு, தரமான சுகாதார சேவை கிடைப்பது என்பது வெறும் சேவையைப் பெறுவது மாத்திரமன்றி, அது ஒரு அடிப்படைத் தேவையாகவும், நம்பிக்கை மற்றும் இயல்பு நிலைக்குத் திரும்புவதன் அடையாளமுமாகும். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப இந்த திட்டம் பங்களிப்புச் செய்யும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த நிகழ்வு ஒரு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான மற்றும் பலமான சமூகத்திற்கும், சிறந்த எதிர்காலத்திற்குமான அடித்தளமாகும்.
வட மாகாணத்தின் இயல்பான மனித வாழ்வை உறுதிப்படுத்தவும், மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தவும், அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லவும் அரசாங்கமும் ஜனாதிபதியும் எடுத்த சாதகமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு வட மாகாண மக்களின் உண்மையான மற்றும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகும். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வட மாகாணம் மீது காட்டும் கவனத்தை பாராட்டுவதுடன், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் ஒவ்வொரு சமூகத்திற்கும் நன்மைகளை வழங்கி, விரைவாகவும் நியாயமாகவும் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





