இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு மஜக பாடுபடும்மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி அறிவிப்பு

சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மஜக முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் திரு. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் திருமதி எஸ். சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக மனிதநேய ஜனநாயக கட்சி தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் என மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இதற்காக இரு தொகுதிகளிலும் சிறப்பு தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், திமுக தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து தேர்தல் பணிகளை முன்னெடுக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
