சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் 50 ஆண்டு பூர்த்தி விழா
கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅதின் 50 வது வருட பூர்த்தி விழாவும் 47 ஆவது வருட மீலாத் சன்மார்க்க அறிவுப் போட்டி பரிசளிப்பு வைபவம் செப்டம்பர் ண06ம் திகதி பி.ப. 3.00 மணிக்கு சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். முக்தார் மற்றும் இணைச் செயலாளர் கலீபதுஷ் ஷாதுலி அஷ்செய்க் அல்ஹாஜ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் (நளீமி) ஆகியோரின் இணைத் தலைமையில் அல் ஹூமைஸரா தேசிய பாடசாலை மர்ஹூம் எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
மேன் முறையீற்று நீதிமன்ற நீதியரசர் (ஓய்வுநிலை) அல்ஹாஜ் அஹ்ஸன் மரிக்கார் பிரதம அதிதியாகவும், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் மர்ஹூம் அலவி மௌலானாவின் அந்தரங்கச் செயலாளர் அஸ்ஸெய்யித் நகீப் மௌலானா, இலங்கையின் சவூதி அரேபியா ஜித்தா கவுன்சலர் ஜெனரல் அஸ்ஸெய்யித் பலாஹ் அல் ஹிப்ஷி மௌலானா அஸ்ஸெய்யித் ஹூஸைன் மியா முஹம்மத் ஹனீப் மௌலானா, ஆலிமுல் பாலில் அஸ்ஸெய்யித் பலுலுத்தீன் மௌலானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பலஸ்தீன நாட்டின் முன்னால் இலங்கைத் தூதுவர் அல்ஹாஜ் பவ்ஸான் அன்வர் விசேட அதிதியாகவும் கலந்துகொள்வர்.
மாத்தறை மின்னதுல் பாஸிய்யா அரபுக் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளரும் கஹட்டோவிட முஅஸ்கர்’ ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி பணிப்பாளருமான ரயீஸூல் முகத்தமுஷ் ஷாதுலி மௌலவி எம்.என்.எம். இக்ராம் (பாஸி) சிறப்புப் பேச்சாரளாகவும் கலந்து கொள்வார்.
பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன
சீனன் கோட்டை குர்ஆன் மதாரிஸின் கீழ் உள்ள 15 குர்ஆன் மத்ரஸாக்களின் மாணவ மாணவிகள் இந்த சன்மார்க்க அறிவுப் போட்டிகளில் பங்குபற்றினர். அல்குர்ஆன் மனனம், கிராஅத், கஸீதா, இஸ்லாமிய கீதம், ஹழரா பைத், கேள்வி பதில், இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) பற்றிய பேச்சு, தரீக்கா தொடர்பான பேச்சு, அரபு எழுத்தணி போட்டிகள் உட்பட மேலும் பல போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பேச்சுப் போட்டி ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் இடம்பெற்றது.
இவ்விழாவில் சீனன் கோட்டை அல் ஹூமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி, சீனன் கோட்டை ஆரம்பப் பாடசாலை ஊரில் உள்ள சர்வதேச பாடசாலை மற்றும் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த சீனன் கோட்டையைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச்செயலாளர் அல் ஹாஜ் எம்.எம்.எம். ஷிஹாப் உட்பட உறுப்பினர்கள், கலீபாக்கள், மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், வாலிபர் ஹழரா ஜமாஅத் தலைவர் பஸீலுர் ரஹ்மான் உட்பட உறுப்பினர்கள், சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலியா கலாபீட தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.ஸீ.எம். ஹம்ஸா உட்பட உறுப்பினர்கள், மூன்று பாடசாலையினதும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், உலமாக்கள், பெற்றோர்கள், பிரமுகர்கள், பிரதேச அரசியல்வாதிகள், குர்ஆன் மத்ரஸா அதிபர்கள், என பலரும் விழாவில் பங்குபற்றுவர். குறிப்பாக முன்னால் மூத்த வாழிபர் ஹழரா ஜெமா அத் உறுப்பினர்களால் இதற்கான பரவலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என வாழிபர் ஹழரா ஜெமா அத் இணைச் செயலாளர் அஸ்மிர் ஹனீஸ் தெரிவித்தார்.


(பீ.எம். முக்தார்)
