உள்நாடு

பாலமுனையில் ‘தஸ்மீனா கிராமம்’ வீட்டுத்திட்டம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு; 14 வீடுகள் கையளிப்பு

இலங்கை, பாலமுனைப் பகுதியில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீடுகளற்ற, தகரக் கொட்டில்களில் வாழ்ந்து கொண்டிருந்த வறுமைப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 14 வீடுகள் உத்தியோகபூர்வமாக நிறைவுபெற்று, “தஸ்மீனா கிராமம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள இலங்கை வாழ் நண்பர்களின் தஸ்மினா ஐஎன்சி என்னும் நிறுவனத்தின் நிதி அனுசரணையோடும், இலங்கையிலுள்ள ஐகோன் என்னும் அமைப்பின் மேலதிக ஆதரவோடும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டப் பணிகளை பாலமுனை பெட்டர் ஹேன்ட் எப். ஹோப் அமைப்பு சிறப்பாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
பெட்டர் ஹேன்ட் ஒப் ஹோப் அமைப்பின் தலைவர் ஜே. அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அமெரிக்காவை வதிவிடமாகக் கொண்ட தஸ்மினா அமைப்பின் இஸ்தாபகர் அல்ஹாஜ் அப்துல் சாஹுல் ஹமீத் அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உதவித் தலைவர் அஷ்ஷெய்க் ஹாசிம் சூரி மதனி அவர்களும் கலந்து கொண்டதோடு, மௌலவி ஐ. கே.எம். சுபியான், பாலமுனை பிரதேசத்தின் பள்ளிவாசல் தலைவர்கள், நிருவாகிகள் மற்றும் கல்விமான்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது அக்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பெட்டர் ஹேன்ட் ஒப் ஹோப் அமைப்பினது செயற்பாட்டு நடடிவக்கைளுக்காகவும் முன்பள்ளிப் பாடசாலை, கற்றல், கற்பித்தல் துறை மேம்படுத்துவற்கான சனசமூக நிலையமொன்றையும் பார்வையிட்டனர்.

இக்பால் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *