உள்நாடு

கல்முனை கடற்கரைப் பூங்காவை மேம்படுத்தும் நோக்கில் கள ஆய்வு

கல்முனை கடற்கரைப் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பாராளுமன்ற உறுப்பினரும் கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவரும் அரசியல் அமைப்பு பேரவையின் உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா, கல்முனை மாநகர ஆணையாளர், பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள், மாநகர சபை அதிகாரிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து நேரில் சென்று பார்வையிட்டு விரிவான கள ஆய்வை (16) மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, பூங்காவின் தற்போதைய நிலை, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் குறிப்பாக, பூங்காவின் உள்ளும் வெளியும் காணப்படும் ஒழுங்கற்ற குப்பை கொட்டுதல், குப்பை எரித்தல், கழிவுநீர் தேக்கம், சுகாதாரக் குறைபாடுகள், சேதமடைந்த உட்கட்டமைப்புகள், பராமரிப்பின்மை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல முக்கிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

கல்முனை மக்களின் பெருமைக்குரிய இந்த கடற்கரைப் பகுதியை, குடும்பங்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயன்படுத்தக்கூடிய நவீன பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாப் பூங்காவாக மாற்றுவதற்கான பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முழுமையான சுத்தம் மற்றும் கழிவு முகாமைத்துவம், முறையான வடிகால் வசதிகள், பூங்கா அழகுபடுத்தல் மற்றும் மரநடுகை, நடைபாதைகள் மற்றும் அமர்விடங்கள், சிறுவர் விளையாட்டு வசதிகள், போதிய மின்விளக்குகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பு ஆகியவை முக்கியமாக வலியுறுத்தப்பட்டன.

கல்முனை கடற்கரைப் பூங்கா கல்முனை நகரின் இயற்கைச் செல்வமாகும். இதனைப் பாதுகாத்து, சுத்தமாகவும் அழகாகவும், அனைவரும் பெருமைப்படும் ஒரு முன்னோடியான பொது பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவதும் எல்லோரதும் பொதுப் பொறுப்புமிக்கதாகும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *