இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திய சவூதி தூதுவருக்கு கெளரவம்
இலங்கைக்கான தனது இராஜதந்திரக் கடமைகளை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் சவூதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கு சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு இந்த விசேட நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான முனீர் முளப்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு தூதுவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இவர்களுடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் தூதரகத்திற்குச் சென்று இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
சவூதி தூதுவர் தனது பதவிக்காலத்தில் இலங்கையின் கலாசார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தியதற்கும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.



