விளையாட்டு

பேருவளை – சீனன் கோட்டை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் கிரிக்கெட் திருவிழா

2017 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி சம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தது

பேருவளை – சீனன் கோட்டை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் நூற்றாண்டைக் கடந்த கல்விப் பாரம்பரியத்தையும், விளையாட்டுத் திறமையையும் மேலும் மெருகூட்டும் உயரிய நோக்கில், எட்டு ஆண்டுகளின் பின்னர் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் திருவிழா வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் நிறைவடைந்தது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், தற்போதைய மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒற்றுமையான பங்களிப்பால் இந்த விளையாட்டுத் திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு, அல்ஹுமைஸரா குடும்பத்தின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுப் பாரம்பரியத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

கடந்த ஜூலை மாதம் 4 ஆம் திகதி சீனன் கோட்டையில் அமைந்துள்ள நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளரும், உலகப் புகழ்பெற்ற முன்னாள் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டித் தொடரை ஆரம்பித்து வைத்தார்.

அவரது வருகை பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நான்கு ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், 1984 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி முதல் 2022 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி வரை அல்ஹுமைஸராவில் கல்வி கற்ற முப்பத்தெட்டு பழைய மாணவர் அணிகள் பங்கேற்று விளையாடின.

தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் கடந்த ஜூலை 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னொளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இறுதிப்போட்டியில் 1999 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி மற்றும் 2017 ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர் அணி பலப்பரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய 2017 ஆம் ஆண்டு அணி, நிர்ணயிக்கப்பட்ட நான்கு ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்காக 56 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடிய 1999 ஆம் ஆண்டு அணி, நான்கு ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 2017 ஆம் ஆண்டு அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

2017 ஆம் ஆண்டு அணி சார்பில் அப்துல் ஹகீம், எட்டு பந்துகளில் ஒரு நான்கு ஓட்டமும் இரண்டு ஆறு ஓட்டங்களும் அடங்கலாக 21 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

1999 ஆம் ஆண்டு அணி சார்பில் பஸ்மி, பதின்மூன்று பந்துகளில் நான்கு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 29 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை போராடினார்.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது 2017 ஆம் ஆண்டு அணியின் அப்துல் ஹகீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் அப்துல் ஹகீமே பெற்றார்.

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது, 1997 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த இஷாக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், 1999 ஆம் ஆண்டு அணி, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தது. இம்முறையும் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்த போதிலும் மீண்டும் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

மறுபுறம், 2017 ஆம் ஆண்டு அணி தனது ஒற்றுமை, திறமை மற்றும் போராட்ட மனப்பாங்கின் மூலம் முதன்முறையாக சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றில் புதிய சாதனையைப் பதிவு செய்தது.

இந்த விளையாட்டுத் திருவிழாவின் சிறப்பான ஒழுங்கமைப்பு, மின்னொளி வசதி, போட்டி நடத்தப்பட்ட விதம், வீரர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் ஆகிய அனைத்தும் கலந்து கொண்ட அனைவரின் பாராட்டைப் பெற்றன.

இது வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டுமல்லாமல், பழைய மாணவர்களை மீண்டும் ஒன்றிணைத்த நட்பின் விழாவாகவும், தலைமுறைகளை இணைத்த சமூக நிகழ்வாகவும், பேருவளை – சீனன் கோட்டை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பெருமையை மீண்டும் உலகிற்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவும் அமைந்தது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக அல்ஹாஜ் காமில் நளீம் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களையும் விருதுகளையும் வழங்கினார்.

மேலும், பாடசாலை அதிபர் பர்ஸான், பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் இப்திகார் ஜெமீல் மற்றும் அல்ஹாஜ் அம்ஜாத், சீனன் கோட்டை பள்ளிச் சங்கச் செயலாளர் அல்ஹாஜ் ஷிஹாப், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கல்வி, விளையாட்டு, ஒற்றுமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழா, பேருவளை – சீனன் கோட்டை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் வரலாற்றில் பொற்குறியிடத்தக்க மற்றுமொரு அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.

(பேருவளை – பீ. எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *