புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
புத்தளம் தள வைத்தியசாலையின் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி பணிகள் குறித்த விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்று நேற்று (14) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிலாபம் வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புத்தளம் தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி வைத்தியர் லியனகே, புத்தளம் மாநகர முதல்வர் ரின்சாத் அகமட் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, வைத்தியசாலையின் தற்போதைய அவசரத் தேவைகள் மற்றும் நோயாளர் நலன்புரி சேவைகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, வைத்தியசாலையில் தற்போது நிலவிவரும் கட்டமைப்பு குறைபாடுகள், வைத்தியர்களின் தடையற்ற சேவைக்கு அவசியமான நவீன மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறைகள் மற்றும் அவற்றுக்கான தேவைகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், வைத்தியசாலை நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு சவாலாக காணப்படும் வைத்திய உதவியாளர்கள் உள்ளிட்ட ஆளணிப் பற்றாக்குறை குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், இக்குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.





(ஏ.என்.எம் முஸ்பிக்)
