உள்நாடு

மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரம்பம்..! புனரமைக்கப்பட்ட ஆய்வுகூடம், வாசிகசாலை மீள்திறப்பு..!மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

மஹகொடை அபிவிருத்திச் சமூகம் (Mahagoda Development Community – MDC) முன்னெடுத்துள்ள கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளின் முதலாவது செயற்திட்டமாக, பேருவளை மஹகொடை WP/KL/I.L.M. Samsudeen Vidyalaya பாடசாலையின் கல்வி வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், கல்விச் சாதனையாளர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் சிறப்பு விழாவும் நேற்று (02) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு, மஹகொடை அபிவிருத்திச் சமூகம், பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வு புனித அல்குர்ஆன் ஓதலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் தலைவர் வரவேற்புரையையும் தலைமையுரையையும் நிகழ்த்தினார். பின்னர் பாடசாலையின் உதவி அதிபர் அஷ்ஷெய்க் றிப்கான் Naleemi அவர்கள் உரையாற்றி, பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக மஹகொடை அபிவிருத்திச் சமூகம், பழைய மாணவர் சங்கம் மற்றும் சமூகத்தின் நல்லுள்ளங்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பு முன்மாதிரியாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டு தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் முதலாவது கல்விச் சேவைத் திட்டங்கள் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் பாடசாலை வாசிகசாலை மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. மேலும், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை மஹகொடை அபிவிருத்திச் சமூகம் பொறுப்பேற்கும் புதிய கல்வி ஆதரவு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாக, 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E. O/L) சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். International Human Rights Global Mission அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், BookMark Mahagoda, Beruwala நிறுவனத்தினால் கல்வி ஊக்குவிப்பு நோக்கில் புத்தகக் கொள்வனவுக்கான வவுச்சர்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம், சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிகாட்டி அர்ப்பணிப்புடன் கற்பித்த பாட ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு விருதுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அண்மையில் நடைபெற்ற மாதிரிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் தனது சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய பங்களிப்பை வழங்கியது. கல்விச் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதோடு, மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் பணியில் மஹகொடை அபிவிருத்திச் சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு, பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியது.

நிகழ்வில் பல்வேறு சமூகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், மஹகொடை அபிவிருத்திச் சமூக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

“கல்வியே நிலையான சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்” என்ற உயர்ந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் முதலாவது செயற்திட்டம், பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும், சமூகமும் பாடசாலையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளதாக நிகழ்வில் உரையாற்றியோர் கருத்துத் தெரிவித்தனர்.

மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் இந்த முன்னெடுப்பு, கல்வியை மையமாகக் கொண்ட சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பாராட்டப்பட்டதுடன், எதிர்காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கல்வி, ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஒருங்கிணைத்த இந்நிகழ்வு, மஹகொடைப் பகுதியின் கல்வி மற்றும் சமூக முன்னேற்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது

(பேருவளை பர்ஹான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *