வரலாற்று சாதனை படைத்த ஹிழுறிய்யா வித்தியாலய மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு; பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
காத்தான்குடி மட்/மம ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் “மாபெரும் மாணவர் கௌரவிப்பு விழா” நேற்று (02) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி யூ.எம்.எப். பாஹி தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவும் கலந்துகொண்டார்.
இதன்போது சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், “அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் பெற்று காத்தான்குடிக்கு பெருமை சேர்த்துள்ள ஹிழுறிய்யா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பாடசாலையை கல்வி, விளையாட்டு, கலாசாரம், நிர்வாகம் மற்றும் பௌதீக வளங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற இவ் அடைவு மட்டத்திற்கு காரணமான அதிபர் எஸ்.ஜே. யாஸிர் அரபாத் அர்ப்பணிப்புமிக்க சேவை என்றும் பாராட்டுக்குரியது. அதேபோன்று பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்களின் தன்னலமற்ற பங்களிப்புகளே இப்பாடசாலையின் இவ்வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.
எமது மாணவர்கள் கல்விக்கு முதன்மை அளிக்க வேண்டும். எந்தத் துறையில் செயற்பட்டாலும் உயர்கல்வியுடன் கூடிய தகுதியைப் பெற்றவர்களாக உருவாக வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையில் தலைமைத்துவம் செலுத்த முடியும். இன்றைய நவீன உலகின் தேவைக்கேற்ப தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மற்றும் தொழில்முறை கற்கைநெறிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்சந்தைகளில் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய வகையில் எமது கல்வி அமைப்பு அமைய வேண்டும்.
இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக என்னால் இயன்ற பல்வேறு பங்களிப்புகளை வழங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்திலும் என்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் தொடர்ந்தும் வழங்குவேன். இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவரின் பிரார்த்தனைகளும் இன்று பலனளித்துள்ளன” என்றார்.
தொடர்ந்து, இச்சிறப்பான சாதனைக்கு பங்களித்த அதிபர் எஸ்.ஜே. யாஸிர் அரபாத், ஆசிரியர்கள் மற்றும் சாதனை மாணவர்களை பிரதம அதிதிகள் கௌரவித்து நினைவுச் சின்னங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.






— ஊடகப்பிரிவு
