திருவள்ளூர் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் உயிரிழந்தனர்.தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அமோனியா வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 பேரில் 7 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழு இந்த வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது
