புனித வெசாக் அரச விழா ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்
இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை ‘வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சமஸ்த லங்கா சாசனாரக்ஷக மண்டலத்தின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் வெசாக் விழாக்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இவ்வருடத்திற்கான அரச வெசாக் விழா, மாத்தறை, திஹகொடை, மிதெல்லவல விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து கலாநிதி ஹினிதும சுனில் செனெவி பின்வருமாறு விளக்கமளித்தார்:
“வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையில் செய்ய வேண்டிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பேய் மாளிகைகள் மற்றும் விசித்திரமான நடனங்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தன. மற்றொன்று, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்குமாறு அல்லது முற்றாகத் தவிர்க்குமாறு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.”
