அம்பாறை மாவட்டத்தின் களஞ்சியசாலைகளில் குவிந்து கிடக்கும் சுமார் 50,000 மெட்ரிக் டொன் நெல்லை உடனடியாக அகற்ற அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி
நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூல விவாதம் கெளரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று(19.05.2026) நடைபெற்ற போது அம்பாறை மாவட்டம் தேசிய அளவில் 22 சதவீதத்திற்கும் அதிகமான நெல் உற்பத்தியை வழங்கும் முக்கிய மாவட்டமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் சென்ற வருடம் விவசாயிகளிடமிருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட 50,000 மெட்ரிக் டொன் நெல் தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் இப்போகத்திற்கான நெல் அறுவடை நடைபெறவுள்ள நிலையிலும் இதுவரை அம்பாறை மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் 50,000 மெட்ரிக் டொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட அகற்றப்படாத நிலையிலேயே உள்ளது.
சம்மாந்துறை நெல் களஞ்சியசாலையில் 2,000 மெட்ரிக் டொன், மல்வத்தை நெல் களஞ்சியசாலையில் 2,300 மெட்ரிக் டொன், நாவிதன்வெளி நெல் களஞ்சியசாலையில் 2,000 மெட்ரிக் டொன், அட்டாளைச்சேனை நெல் களஞ்சியசாலையில் 1,500 மெட்ரிக் டொன், அக்கரைப்பற்று 02 நெல் களஞ்சியசாலையில் 3,400 மெட்ரிக் டொன், தம்பட்டை நெல் களஞ்சியசாலையில் 1,800 மெட்ரிக் டொன், சாகாமம் நெல் களஞ்சியசாலையில் 1,200 மெட்ரிக் டொன், பொத்துவில் நெல் களஞ்சியசாலையில் 2,000
மெட்ரிக் டொன், பாணம, லவ்கல நெல் களஞ்சியசாலைகளில் 3,000 மெட்ரிக் டொன், தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, தமண ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலைகளில் 30,800 மெட்ரிக் டொன் என மொத்தமாக 50,000 மெட்ரிக் டொன்
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.
மேலும் அறுவடை காலம் நெருங்கி வரும் நிலையில் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை வேறு இடங்களுக்கு மாற்றுதல், அரிசியாக மாற்ற உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளுதல்,
களஞ்சிய இடவசதியை விரிவுபடுத்தும்
அவசர நடவடிக்கைகளை விவசாய அமைச்சும் நிதி அமைச்சும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த விடயம் மிகவும் முக்கியமானது எனவும் தேசிய ரீதியில் அதிகளவான நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அறுவடை காலம் நெருங்கிவருவதால் அரசாங்கம் படிப்படியாக களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை அகற்றுவதற்கான விலைமனு கோரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நெல் விலைமனு கோரப்பட்டு விரைவில் அகற்றப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
(கே. எ. ஹமிட்)
