ஒரு தசாப்த காலமாய் தொடரும் உன்னத கல்விச் சேவை: சிறப்பாக இடம்பெற்ற அப்ரார் பவுண்டேஷனின் 13வது கட்ட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்
பேருவளை பிராந்தியத்தில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் கல்வி வாழ்வுக்கு ஒளியூட்டும் நோக்கில் ‘பேருவளை அப்ரார் பவுண்டேஷன்’ நிறுவனம் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக மகத்தான சேவையாற்றி வருகிறது.
கல்விக் கண்களைத் திறக்கும் இந்த பவுண்டேஷனின் அரிய பணியினால், ஏற்கனவே உதவிபெற்ற பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று பல்கலைக்கழகப் படிப்பை நிறைவு செய்து, பட்டதாரிகளாக உயர் பதவிகளில் ஜொலிப்பதோடு, இன்னும் பலர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தங்களது உயர் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.
இப்புலமைப்பரிசில் திட்டத்தில் இனம், மதம் கடந்து சிங்கள மொழிப் பாடசாலைகளில் பயிலும் தகுதியான மாணவர்களும் உள்வாங்கப்பட்டு உதவி பெற்று வருகின்றமையானது இப்பிராந்தியத்தில் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லுறவையும், சகவாழ்வையும் பலப்படுத்தும் ஒரு முன்மாதிரியான விசேட அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், அப்ரார் பவுண்டேஷனின் 13 வது புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் இன்றைய தினம் பேருவளை, மருதானையில் அமைந்துள்ள ‘மனாரா ரிஸோர்ட்’ வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது, பேருவளைப் பிராந்தியத்தைச் சேர்ந்த சுமார் 67 திறமையான மாணவர்கள் இம்முறைக்கான புலமைப்பரிசில் உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
வெறும் நிதியுதவியோடு நின்றுவிடாமல், இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, நேர்காணல்கள் மற்றும் ஆன்லைன் (நிகழ்நிலை) வாயிலாக அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும், ஊக்கவிப்புகளையும் அப்ரார் பவுண்டேஷன் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது அப்ரார் பவுண்டேஷனின் தலைவரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் பொருளாளருமான அஷ்ஷெய்க். கலாநிதி. அஸ்வர் அஸாஹிம் (அஸ்ஹரி) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்வின் வரவேற்புரையையும், நிறுவனத்தின் பின்னணி மற்றும் இலக்குகள் குறித்த விளக்கத்தையும் “எழுச்சி பெற்ற சமூகம், கல்விச் சமூகமே!” எனும் தொனியில் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீட இறுதி வருட மாணவர் உஸாமா நவாஸ் ஆற்றினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல வைத்தியர் திருமதி. சந்திரிகா (MBBS) அவர்கள் கலந்து சிறப்பித்து, மாணவர்களுக்கான சரியான உணவுப் பழக்கவழக்கங்கள், போஷாக்கான உணவுகளை உட்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்களை நேரத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான கல்வி வழிகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து மிகத் தெளிவான, அழகான விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வூட்டினார்.
இந்நிகழ்வு முழுவதையும் ஆசிரியர் இஹ்ஸான் ஹம்ஸா அவர்கள் தமக்கே உரிய பாணியில் மிக அழகிய முறையில் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் அப்ரார் பவுண்டேஷன் செயலாளர் பொறியாளர் அல்ஹாஜ் ராஜி, பொருளாளர் அல்ஹாஜ் ஹலிம் எ அஸீஸ் , இலங்கை வக்ப் சபை உறுப்பினர் அல்ஹாஜ் அரூஸ் அஸாத் மற்றும் அஸாம் பாக்கிர் மாக்கார் ஊர்ப்பிரமுகர்கள், நலன்புரி சங்க உறுப்பினர்கள், நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, நிகழ்வின் இறுதியாக வருகை தந்திருந்த அனைவருக்கும் அல்ஹாஜ் இக்பால் ஸம்சுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, சமூக மாற்றத்தை உருவாக்கி வரும் அப்ரார் பவுண்டேஷனின் இந்த உன்னதப் பணி மேலும் தொடர வேண்டும் எனப் பிராந்திய மக்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.




(பீ.எம். முக்தார்)
