உள்நாடு

உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில், “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.’ (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.

இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான்.

அதேநேரம் இலங்கையில் காணப்படும் விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958) கூறும் விடயங்களையும் கவனத்திற் கொண்டு இதனை நிறைவேற்ற வேண்டும்.

இஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது. ஜீவ காருண்யத்தை ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!” என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் மார்க்க வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

01. உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

02. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ஆம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியும்.

03. மாடு, ஆடு, ஒட்டகம் ஆகியவை மட்டுமே உழ்ஹிய்யாவிற்கு செல்லுபடியாகும்.

04. ஒரு மாட்டில் அதிகபட்சம் ஏழு பேர் பங்கேற்க முடியும்.

05. கூட்டு உழ்ஹிய்யாவில் சேருவோர் ஆகக் குறைந்தது ஒரு பங்கில் முழுமையாக சேர்ந்திருத்தல் வேண்டும்.

06. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்படல் வேண்டும்.

07. உழ்ஹிய்யா பிராணியை அறுக்கும்போது அறுப்பவருக்கு சொந்தமாக இருத்தல் வேண்டும். இது தொடர்பான வழிகாட்டலை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்: https://www.acju.lk/ta/udhiya-crn/

08. அறுவை தொடர்பான மேலதிக இஸ்லாமிய வழிகாட்டலை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்: https://www.acju.lk/ta/gud-slgrn/

09. மஸ்ஜிதைப் பாதுகாப்பதும் அதனைச் சுத்தமாக வைத்திருப்பதும் எமது பொறுப்பாகும். ஆகவே, உழ்ஹிய்யாப் பிராணிகளை அறுப்பதற்கும் அதனுடன் தொடர்புடைய இதர தேவைகளை மேற்கொள்வதற்கும் மஸ்ஜித் மற்றும் அதை அண்டியுள்ள தொழுகை நடைபெறும் இடங்களை பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

பொது வழிகாட்டல்கள்:

01. Animal Act No. 29 of 1958 சட்டம் பின்பற்றப்படல் வேண்டும்.

02. சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை பாதிக்கப்படாத வகையில் நடந்து கொள்ளல் வேண்டும்.

03. தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் முன்கூட்டியே பெறப்படல் வேண்டும்.

04. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கவனிக்கப்படல் வேண்டும்.

05. அறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்துவிடல் வேண்டும்.

06. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

07. உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும்போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ளவேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

08. நாட்டின் மரபுகளைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று உழ்ஹிய்யா கொடுப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும். (இவ்வருடம் மே மாதம் 30, 31 ஆம் தேதிகளிலும் ஜூன் 1 தேதியும் உழ்ஹிய்யா கொடுப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.)

மஸ்ஜிதுடைய இமாம்கள், கதீப்மார்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் முஸ்லிம்களுக்கு எடுத்துரைப்பதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்தவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *