உள்நாடு

அரபாவுக்கு உரமூட்டிய செய்னுதீன் ஆசிரியர்

அரபாவின் ஆணிவேர்கள்…
▫️▫️▫️▫️▫️▫️
க/தெனு. அரபா முஸ்லிம் மத்திய வித்தியாலயம் — கண்டி உடுநுவரை வஹுங்கொஹ மண்ணின் இதயத்துடிப்பு.
அந்த கல்விக்கூடத்தின் ஆணிவேர்களில் ஒன்றாக ஆழமாகப் பதிந்திருந்தவர்,
14.05.2026 அன்று தனது 86 வயதில் இறைஅழைப்பை ஏற்றுக்கொண்ட
மதிப்பிற்குரிய அன்பாசான் செய்னுதீன் ஆசிரியர் அவர்கள்.

அவரின் குணநலன்களும் நடத்தைகளும் அழகானவை.
துணிவும் தொழில்தூய்மையும் நேர்மையும் ஒருங்கே சேர்ந்து வாழ்ந்தவர்.
ஒரு ஆசிரியராக மட்டும் அல்லாமல்,
ஒரு தலைமுறையின் மனச்சித்திரத்தில் ஒழுக்கத்தின் ஓவியம் வரைந்தவர்.

ஒரு பாடசாலையின் சுவர்களை கட்டுவது கற்களாலும் சிமெண்டாலும் இருக்கலாம்.
ஆனால் அதன் ஆன்மாவை கட்டுவது சில மனிதர்களால்தான்.
அப்படிப்பட்ட அரிய மனிதர்களில் ஒருவர் செய்னுதீன் ஆசிரியர் அவர்கள்.

அரபா வித்தியாலயம் என்ற மரம் செழித்து வளர
தன் உழைப்பை பசளையாகப் போட்டவர்;
தன் வியர்வையை நீராக ஊற்றியவர்;
தன் அர்ப்பணிப்பை வேலியாக்கி
அதற்கு பாதுகாப்பாய் நின்றவர்.
இரண்டு தசாப்தங்களாக
இந்த கல்விக்கூடத்தின் ஒளியாக விளங்கியவர்.

அவர் வெறும் ஆசிரியர் அல்ல;
அமைதியாக ஒரு தலைமுறையை வடிவமைத்த சிற்பி.

கையை பிரம்பாக்கியதால் அல்ல,
இதயத்தில் ஒழுக்கம் இருந்ததால்தான்
எங்களை நெறிப்படுத்தினார்.

பிரம்பின்றியே அடக்கத்தை கற்றுத்தந்தார்;
அச்சமின்றியே மரியாதையை விதைத்தார்;
கட்டளையின்றியே பண்பாட்டுடன் வாழக் கற்றுத்தந்தார்.

அவர் எங்களிடம் ஆட்சி செய்தவர் அல்ல;
ஆனால் அடக்குமுறை இல்லாத ஒரு அரசனாய்
எங்கள் மனங்களில் அரியணை ஏறியவர்.

அவரின் பார்வை போதும் தவறைத் திருத்த;
அவரின் சிரிப்பு போதும் மனதை நிமிர்த்த.

மாணவர்களாக இருந்தபோது
எங்கள் விரல்களைப் பிடித்து எழுத்து கற்றுத்தந்தவர்;
வாழ்க்கைக்குள் நுழைந்தபோது
எங்கள் தோளில் கை வைத்து
நம்பிக்கையோடு நடக்கக் கற்றுத்தந்தவர்.

“நேரம் மனிதனை உயர்த்தும்;
அதை மதிக்கக் கற்றுக்கொள்” என்று
நேரத்தின் அருமையை நமக்குள் விதைத்தவர்.

இன்று அவரின் மறைவுச் செய்தி
பல இதயங்களை நனைக்கிறது.

ஆனால் அவர் விதைத்த விதைகள் இன்னும் உயிரோடு உள்ளன.
அவர் உருவாக்கிய மாணவர்கள்
இன்று சமூகத்தின் பல துறைகளில் உயர்ந்து நிற்பது
அவரின் உழைப்புக்கான உயிருள்ள சாட்சியாகும்.

செய்னுதீன் சர்..’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர்..

அவர் வெறும் உடலுடன் இறைவனிடம் செல்லவில்லை.
அவரின் வழிகாட்டுதலில் வளர்ந்த
எண்ணற்ற மாணவர்களின் துஆக்களையும்,
நன்றியையும், நினைவுகளையும் சுமந்தபடி சென்றுவிட்டார்.

அரபாவின் வரலாறு எழுதப்படும் ஒவ்வொரு பக்கத்திலும்
அவரின் பெயர் மையால் எழுதப்படாது;
மாணவர்களின்
நன்றியாலும்,
பிரார்த்தனைகளாலும் எழுதப்படும்.

நாங்கள் கற்ற ஆசான்களை நினைவுகூரும் போதெல்லாம்
அவரின் நினைவு ஒரு ஒளிக்கீற்றாய்
எங்கள் உள்ளங்களில் என்றும் மலர்ந்துகொண்டே இருக்கும்.

அவரிடம் கற்ற பல கிராமத்து மாணவர்கள்,
அவர்களது பெற்றோர்கள்,
வஹுங்கொஹ, தவுலகலை, மாஹிங்கொட கிராமத்தின் மக்கள் அனைவரும்
இன்று நன்றியுணர்வோடு
அவருக்காக இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம்.

யா அல்லாஹ்…
இந்த அழகிய மனிதரின் தவறுகளை மன்னித்து,
அவரின் கப்ரை ஒளியால் நிரப்பி,
சுவனத்தின் உயர்ந்த இடங்களில்
அவரை குடியமர்த்துவாயாக.

▫️▫️▫️▫️

அஸ்ஹர் அன்ஸார்
மனோத்துவ ஆலோசனை நிபுணர்
(அவர் உருவாக்கிய மாணவர்களில் ஒருவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *