உலகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவுக்கிடையில் பெற்றோலியம் எல்.பி.ஜி.வினியோகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்தார். அப்போது, இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு ஒப்பந்தம், பெட்ரோலிய இருப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒப்பந்தம், குஜராத்தின் வதினார் பகுதியில் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைப்பதறகான ஒப்பந்தம், ஆர்பிஎல் வங்கி மற்றும் சம்மன் கேப்பிட்டல், இந்தியன் இன்பராஸ்ட்ரக்சர் ஆகியவற்றில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் வரலாற்றுச் சிறப்புமிக்க எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவில் அபுதாபி ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உறுதியளித்தது. மொத்தம் 6 ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு மணி நேர குறுகிய பயணமாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அடுத்து அங்கிருந்து நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

மே 15 முதல் 17 வரை நெதர்லாந்து, மே 17 முதல் 18 வரை ஸ்வீடன், மே 19-ல் நார்வே ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும், நார்வேயில் இந்தியா – நார்வே இடையேயான மூன்றாவது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *