மே தினம் பற்றி இஸ்லாமிய பார்வை
மே தின பார்வையில் இஸ்லாத்தில் தொழிலாளர் உரிமைகள்ஒவ்வொரு மனிதனும் கண்ணியமாக உழைத்து வாழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. யாசகம் கேட்டு வாழாமல், பிறர் உழைப்பில் வாழாமல் வியர்வை சிந்தி தனது கரங்களால் உழைத்து வருமானம் தேடி வாழும் கௌரவமான வாழ்க்கையை இஸ்லாமிய பொருளாதாரம் எமக்கு எடுத்தியம்புகின்றது.இது பற்றி சூரா ஜும்ஆவில் இடம் பெற்றுள்ள மறை வசனம் “ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டதும் மஸ்ஜிதில் இருந்து வெளிப்பட்டு பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளை தேடிக் கொள்ளுங்கள்!” என்ற இறைவழிகாட்டல் ஓர் ஆன்மீக வணக்கத்தை தொடர்ந்து தொழில் வாழ்வாதாரத்துக்கு முயற்சிப்பதன் அவசியத்தை எமக்கு வலியுறுத்துகிறது.
இதேபோன்று “வியர்வை உலர்வதற்கு முன் பணியாளரின் கூலியை கொடுத்து விடுங்கள்!” என்ற மாநபி (ஸல்) அவர்களுடைய மணிமொழி, செய்த வேலைக்கு ஏற்ற கூலியை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பதில் காலம் தாழ்த்துவதோ, இழுத்தடிப்பதோ கூடாது என்ற தொழிலாளரின் அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் மீதான கடமைகளும் பொறுப்புகளும் தொடர்பில் ஐ.நா சபையின் மனித உரிமைகள் சாசனத்தின் பின்னணியில் பின்வரும் ஐந்து எண்ணக் கருக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1. தூய்மையான எண்ணத்துடன் தொழில் புரிதல்.
2. செய்யும் தொழிலை ஒரு வணக்கமாக கருதுதல்.
3. நம்பிக்கையுடன் பொறுப்புணர்வுடனும் செயற்படுதல்.
4. தொழில் பற்றிய அறிவை பெற்றிருத்தல்.
5. நிறைவுடன் நேர்த்தியாக செய்தல்.
நம்பிக்கை பொறுப்புணர்வு வகைகூறல் போன்ற விழுமியப் பண்புகளை சகல சமயங்களும் வலியுறுத்துவதால் எத்துறை சார்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை, தியாகம் அர்ப்பணிப்பு ஆகிய அணிகலன்களாகக் கொண்டு தேச மக்கள் அனைவருக்கும் எதுவித வேறுபாடுமின்றி பணியாற்றுவது தார்மீக பொறுப்பாகும்.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு நல்ல குடும்பம், முன்மாதிரியான சமூகம், அபிவிருத்தி அடைந்த நாடு ஆகிய சிறப்புகளை எமது கண்முன்னே காணக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வேளை பன்மைத்துவத்தைப் புரிந்து தேச நலன்களை முதன்மைப்படுத்தி ‘நாம் இலங்கையர்’ என்ற பொது அடையாளத்துடன் தேசத்தைக் கட்டியெழுப்பும் துறைகளுக்கு சகல தொழில் வாண்மையாளர்களும் பணியாற்ற முன்வருவது எமது இன்றைய காலத்தின் அறைகூவலாகும்.தொழில் ஆசை காட்டி, பேராசை உணர்வை தூண்டி சர்வதேச ரீதியில் சகஜமாக நடைபெறும் மனித கடத்தல்கள் (HumanTrafficking) ‘ஹராம்’ மட்டுமல்ல; அவை உயிராபத்தை விளைவிப்பதால் ‘உயிர் வாழும் உரிமை’ என்ற மனித உரிமை அப்பட்டமாக மீறப்படுகிறது.
சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டில் தொழில் செய்ய முடியாது என்பதுடன் மனித கடத்தல்காரர்கள் “உங்களை ஏமாற்றி, தப்பிப் போய்விடுவார்கள்; எச்சரிக்கையாக இருங்கள்; உங்களின் பெறுமதிமிகு வாழ்க்கை மற்றும் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!” என்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தொடரான எச்சரிக்கை, மே தின சிந்தனையில் நாம் ஜீரணித்துக் கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.
தொழிலாளர்கள் பற்றிய இஸ்லாமிய நோக்கு வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
1. தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குனர்களுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு, கண்ணியம் இருக்க வேண்டும்.
2. பணியாளர்களால் சுமக்க முடியாத வேலைகளை சுமத்தாதிருத்தல் வேண்டும்.இது தொடர்பில் நபி (ஸல்) ஒரு தடவை அபூதர் (ரழி) அவர்களை பார்த்து தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து அவர்களை சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு நீங்கள் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் சேர்ந்து உதவியாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
எனவே மே தினம் சொல்லுகின்ற செய்தி இஸ்லாத்தில் ஏலவே எங்களுக்கு சொல்லப்பட்ட செய்தியாகும்.சமகால உலகில் இஸ்லாத்தில் கூறப்படுகின்ற தொழிலாளர் முதலாளி தொடர்புகள் உறவுகள் அனைத்தும், மே தின செய்திகளில் அடங்கியிருக்கின்றன. மனித உரிமைகள் பற்றிப் பேசுகின்ற அமைப்புக்கள், ஊடகங்கள் அனைத்தும் மே தின செய்தியை சமூகத்துக்கு முன் வைக்கும் போது சமய ரீதியான நோக்குகளையும் முன்வைப்பது இக்காலகட்டத்தில் அவசியமாக உணரப்படுகிறது. எனவே, இஸ்லாம் கூறுகின்ற மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் அனைத்தும் சமகாலத்துக்கு ஏற்புடையவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எனவே, சமய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தத்துவார்ந்த ரீதியாகவும் ‘தொழிலாளர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்’ என்ற சிந்தனைக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது என்பதை நாங்கள் கவனத்திற் கொண்டு நடந்து கொள்வோமாக!
அஷ்-ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நழீமி) M.Aஓய்வுநிலை – சிரேஷ்ட விரிவுரையாளர்
