சீனன்கோட்டையையும் பேருவளை நகரையும் இணைக்கும் வாய்க்கால் பாலத்தின் விஸ்தீரணப் பணிகள் ஆரம்பம்.

பேருவலை நகரினூடாக சீனன் கோட்டை வீதியை ஊடறுத்துச் செல்லும் இரயில் பாதைக் கடவையோடு இருக்கும் வாய்க்கால் பாலத்தின் விஸ்தீரணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன.
பேருவலை நகரையும் சீனன் கோட்டையையும் இணைக்கும் இப்பாலம் நீண்டகாலமாக குறுகிய அகலம் கொண்டதாக இருப்பதனால் இரயில் கடவை மூடப்பட்டிருக்கும் போது அதிக போக்குவரத்தைக் கொண்டிருக்கும் இப்பாதை வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலான நிலையில் இருந்தது.தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் குறிப்பிட்ட சீனன் கோட்டை வீதியினூடாக சீனன் கோட்டை பத்தை இரத்தினக் கல் சந்தைக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.
இது போன்று வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தகர்களும் வரும் நிலையில் அவ்விடம் ஏற்படும் வாகன நெரிசல் மக்களை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்குகிறது.மட்டுமல்லாது ஜாமிய்யா நளீமிய்யா,அல்ஹுமைஸரா தேசியப் பாடசாலை,நளீம் ஹாஜியார் மகளிர்க் கல்லூரி,இக்ரா தொழில் நுட்பக் கல்லூரி போனறவற்றுக்கும் ஏனைய தேவைகளுக்குமென வருபவர்களுக்கும் இதுவே பிரதான பாதையாக உள்ளது.
இவைகளைக் கருத்தில் கொண்டு ஊர் மக்கள் பேருவலை நகர சபைத் தலைவர் மபாஸிம் அஸாஹிர் அவர்களிடம் குறிப்பிட்ட குறுகிய பாலத்தை விஸ்தீரணப் படுத்தித் தருமாறு வேண்டுகோள் விட்டுத்தனர்.இவ்வேண்டுகோளின் உண்மைத் தன்மையை ஏற்றுக் கொண்ட நகர சபைத் தலைவர் துரிதமாக இவ்விஸ்தரிப்பு வேலையை ஆரம்பிப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது பாலம் மற்றும் பாலம் சார்ந்த வீதியும் விஸ்தரிக்கப் பட்டு வருகின்றன.
வேண்டுகோளை ஏற்று துரிதமாக இவ்விஸ்தீரணப் பணியை மேற்கொண்ட நகர சபைத் தலைவர் மபாஸிம் அஸாஹிர் அவர்களுக்கு சீனன் கோட்டை மக்கள் தமது நன்றியைத் தெரிவிக்கின்றனர்.
(பேருவலை பீ.எம்.முக்தார்)
