மறுமை வாழ்வை ஆரம்பித்தார் என்.எம்.எம் றெஸீன் ஆசிரியர்
பலகத்துறை மண்ணின் மைந்தன் என்.எம். எம். றெஸீன் (றெஸீன் மாஸ்டர்) நேற்று (05.06.2025) வியாழக்கிழமை கொழும்பு மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா நேற்று மாலை கொழும்பு மாளிகாவத்தை மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மூன்று பெண் மக்களின் தந்தையான இவர் தமது 84 ஆவது வயதில் காலமானார்.
ஆசிரியராக, அதிபராக, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி தமிழ் பிரிவின்
தலைவராகசிறப்பான கல்விச் சேவை புரிந்த செம்மல் இவர்.
அந்நாளில் அறிஞர் யூ.எம் தாஸின் நத்வி அவர்களின் ஊடகத்துறைச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற இவர் முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாகவும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார்
நீதிமன்றங்களிலும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகக் கடமை புரிந்தார்.
இலக்கியத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தமது முதுமைக் காலத்திலும் இலக்கிய விழாக்களை அலங்கரித்தவர்.
எனது “கம்மல்துறை வரலாறும் வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்பாக நடத்தியவர்.
திருமண பந்தத்தால் கொழும்பில் வாழ்ந்ததால் இன்றைய எமதூர் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் இல்லாத இலைமறை காய்.
பலகத்துறையின் சிற்பி சேர் ராஸிக் பரீத் அவர்களின் முதுமைக் காலத்தில் அன்னாரை பலகத்துறை க்கு அழைத்து வந்து அன்னாரை கௌரவித்த நன்றி உள்ளம் கொண்டவர்.
கொழும்பு வெல்லம்பிட்டி மஸ்ஜிதுஸ் ஸபா ஜும்ஆப் பள்ளிவாசலின் நிர்வாகசபைச் செயலாளராக தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேல் பணியாற்றி அப்பிரதேச மக்களுக்கு அளப்பரிய சேவைகள் புரிந்தவர்.
கொழும்பு வை.எம்.எம். ஏ. இயக்கத்திலும் சில காலம் செயலாளராகப் பணியாற்றினார்.
மறுமை வாழ்வை ஆரம்பித்துவிட்ட
அன்னாரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸை அல்லாஹ் அவருக்கு வழங்குவானாக!
அவரது பிரிவால் துயரம் அடைந்துள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஆறுதல் அளிப்பானாக! ஆமீன்!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
