உள்நாடு

பெண்ணின் கழுத்திலிருந்த ஐந்து பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை; கிரிபத்கொடையில் பட்டப்பகலில் துணிகரம்

கிரிபத்கொட நகரில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலைக்கு முன்னால் ஒரு பெண்ணிடமிருந்து சுமார் ஐந்து பவுண் எடையுள்ள சுமார் பத்து இலட்சம் ரூபா மதிப்புள்ள கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை திருடிவிட்டு தப்பிச் சென்ற இரண்டு கொள்ளையர்களைக் கைது செய்ய கிரிபத்கொட பொலிஸார் தற்போது விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (3 ) காலை, இரண்டு கொள்ளையர்களும் ஸ்கூட்டரில் வந்து நெடுஞ்சாலையில் பயணித்த பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை திருடி ஹுணுபிட்டிய புதிய வீதி வழியாக வத்தளை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர்.

கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரில் தங்க நகையைத் திருடிய நபர் 45 வயதுக்கு மேற்பட்டவர் என்றும், வெள்ளை முடி மற்றும் தாடியுடன் இருப்பதாகவும், அவர் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட காலர் டி-சர்ட் அணிந்திருந்ததாகவும், முழங்கைக்குக் கீழே அவரது ஒரு கைகளில் பச்சை குத்தியுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் எண் தகடு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்

கிரிபத்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.ஓ.பி. அபேரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரோபன நந்தசிறி, இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் இவை.

(எம் டி எம். ஹனபி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *