Uncategorizedஉள்நாடு

வெகு விமரிசையாக இடம்பெற்ற கஹட்டோவிட்ட ஹிஜ்ரா மாவத்தையின் திறப்பு விழா நிகழ்வு

கஹட்டோவிட்ட பிரதேச மக்களின் 15 ஆண்டுகால நீண்டகாலக் கனவாக இருந்த ஹிஜ்ரா மாவத்தை பாதை முழுமையாகக் கொங்றீட் இடப்பட்டு, நேற்று (17) மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

​சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இப்பாதையைச் செப்பனிடுவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை கைகூடாமல் இருந்து வந்தன. இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழுள்ள அத்தனகல்ல பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ், இப்பாதை மிகவும் தரமான முறையிலும் நேர்த்தியாகவும் கொங்றீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

​கடந்த தேர்தல்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கஹட்டோவிட்ட வட்டார சபையின் உப தலைவரும், மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினருமான அல் ஹாஜ் ஹிசாம் அவர்களின் நேரடி முயற்சியில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

​இப்பாதைப் புனரமைப்புப் பணியானது, கஹட்டோவிட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மொஹம்மத் ஜவாத் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் மொஹம்மத் இன்சாப் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் ஆரம்பிக்கப்பட்டது. சமய விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர் அவர்களின் வழிகாட்டல், அத்தனகல்ல அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் மாபளகம அவர்களின் ஆலோசனை, அத்தனகல்ல தொகுதி என்.பி.பி அமைப்பாளர் புபுது கபுருகேவின் ஒத்துழைப்பு மற்றும் அத்தனகல்ல பிரதேச சபை தலைவர் தர்ஷன விஜேசிங்க அவர்களின் நிதியொதுக்கீடு ஆகியவற்றின் மூலம் இந்த அபிவிருத்தித் திட்டம் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

​நேற்று நடைபெற்ற இப்பாதையின் உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் சமய விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபளகம, தொகுதி அமைப்பாளர் புபுது கபுருகே, பிரதேச சபைத்தலைவர் தர்ஷன விஜேசிங்க, பிரதேச சபை உறுப்பினர் மொஹம்மத் இன்சாப், வட்டார சபைத்தலைவர் மொஹம்மத் ஜவாத் மற்றும் உப தலைவர் அல் ஹாஜ் ஹிசாம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், ஊர்ப் பிரமுகர்களும், ஹிஜ்ரா மாவத்தை பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​நீண்ட காலமாகப் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொண்டு வந்த தமக்கு, இப்பாதையை அழகிய முறையில் புனரமைத்துக் கொடுத்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர் மொஹம்மத் இன்சாப், பிரதேச சபைத்தலைவர் தர்சன விஜேசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கும், அத்தனகல்ல பிரதேச சபைக்கும் கஹட்டோவிட்ட மற்றும் ஹிஜ்ரா மாவத்தை வாழ் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *