புத்தளம் நகர மத்தியில் நினைவு தூபிக்கான மண் பரிசோதனை
புனித அல்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் நிறைவை நினைவுகூரும் முகமாக புத்தளம் நகர மத்தியில் 1970 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அல்-குர்ஆன் நினைவு தூபி கடந்த மே மாதம் அகற்றப்பட்டு அதே இடத்தில் உத்தேச புதிய தூபியை நிர்மாணிக்கும் பணிகள் அரம்பமாகியுள்ளன.
உத்தேச தூபியானது சுமார் 80 அடி உயரமுள்ளதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தூபி அமையப்பெறும் நிலம் அத்தூபியின் அழுத்தச் சுமைக்கு ஏற்புடையதா என்பதை பரிசோதிக்கும் மண் பரிசோதனை நேற்று (14) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இம்மண் பரிசோதனையில் கிடைக்கும் பெறுபேறுகளுக்கு அமைவாக உத்தேச தூபியின் அத்திவாரம் அமைக்க வேண்டிய விதம், தூபிக்காக பயன்படுத்தும் கொங்கிறீட், சீமெந்து, கம்பி வகை உள்ளிட்ட ஒட்டுமொத்த கட்டட நிர்மாணத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் அடிப்படையான பரிசோதனையாகும்.
அமையப்பெறவுள்ள உத்தேச அல்-குர்ஆன் நினைவு தூபியானது குறிப்பாக புத்தளத்துக்கும் பொதுவாக இலங்கைக்கும் அழகு சேர்க்கும் கலை நயமிக்க வரலாற்றுப் படிமமாகத் திகழவுள்ளது.
இத்திட்டத்திற்கான ஆரம்ப செலவீனங்கள் புத்தளத்தில் இரு பெருநாட்களில் மைதான தொழுகைகளை நடாத்தி வரும் புத்தளம் இஸ்லாமிய கலாசார நலன்புரிச்சங்கம் பொறுப்பேற்றுள்ளதோடு, பொது மக்களின் உதவிகளும் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.









எம்.யூ.எம்.சனூன்
