இன்று பிறை தென்படவில்லை; ஸபர் மாதம் நாளை மாலை ஆரம்பம்
புனித ஸஃபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று புதன்கிழமை மாலை பிறைக் குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்பட்டதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் புனித முஹர்ரம் மாதத்தை நாளை 16 ஆம் திகதி வியாழக்கிழமை 30 ஆகப் பூர்த்தி செய்து, நாளை மாலை மஹ்ரிப் தொழுகையுடன் புனித ஸஃபர் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழுத் தலைவர் அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதி மாஹிர் மெளலவி உள்ளிட்ட ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரோஸ் அஹமட், உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


ஏ.எஸ்.எம்.ஜாவித்
