உள்நாடு

இலங்கை ‘முஆய் தாய்’ வரலாற்றில் புதிய மைல்கல் பதிவு :முதுநிலைப் பிரிவில் தங்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார் ஆஷிக்

மினுவாங்கொடை – கல்லொழுவையைச் சேர்ந்த இளம் வீரர் ஆஷிக் நஸீர் (வயது – 20), 7 ஆவது சர்வதேச மற்றும் தாய் தற்காப்புக் கலை விளையாட்டுக்களின் முது நிலைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, ‘முது நிலைப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இலங்கையர்’ என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

“இந்த வெற்றி என்னுடையது மட்டுமல்ல. இது என் பெற்றோர், என் பயிற்சியாளர், என் கிராமம், மற்றும் என்னை நம்பிய ஒவ்வொரு இலங்கையருக்கும் சமர்ப்பணம். சண்டைக் களத்தில் நான் தனியாக இல்லை. 22 கோடி இலங்கையர்களின் துஆப் பிரார்த்தனைகளும் என்னோடு இருந்தது” என்று உணர்வு பூர்வமாகத் தெரிவித்தார்.

“எனது இந்த வெற்றிக்கு, உலகக் குத்துச்சண்டை சபையின் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் ரொஷான் துமிந்த, தலைமைப் பயிற்சியாளர் சயான் இந்துவர ஆகியோரின் அர்ப்பணிப்புகளும் பிரதான காரணம்” என்றும் ஆஷிக் குறிப்பிட்டார்.

தாய்லாந்து – பாங்கொக்கில் (2026 ஜூன் 26) வெள்ளிக்கிழமை நடந்த இப்போட்டியில், 50 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில், இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கம் – 01, வெள்ளிப் பதக்கம் – 01, வெண்களப் பதக்கங்கள் – 04 என்ற அடிப்படையில் வென்றுள்ள நிலையில், இதில் இளம் வீரர் ஆஷிக் தங்கப் பதக்கம் வென்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த வெற்றியானது, தேசிய அளவிலான முக்கிய சாதனையாகும். இலங்கையின் ‘முஆய் தாய்’ விளையாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. ‘Senior பிரிவு’ என்பது, ‘அனுபவம் வாய்ந்த, உலகின் தலை சிறந்த வீர்கள் மோதும் களம்’ என்பதால், இந்தத் தங்கம் சாதாரண சாதனை அல்ல” என்று விளையாட்டு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ‘முஆய் தாய்’ சபையின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு தனி நபரின் வெற்றி மட்டுமல்ல, இது இலங்கை முழுவதற்குமான பெருமை மிகுந்த வெற்றியாகும். அடுத்த தலைமுறை வீர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாகவும் அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இளம் வீரர் ஆஷிக்கின் இந்தச் சாதனைக்குப் பின்னால் பல வருட கடின உழைப்பு, தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சி ஆகியவை அடங்கியுள்ளன. காயங்கள், தோல்விகள், வசதிக் குறைபாடுகள் என பல தடைகளைத் தாண்டி, அவர் இந்த உச்சத்தைத் தொட்டுள்ளார்.

அவரது போராட்ட மனப்பான்மை மற்றும் நாட்டுப் பற்று, 22 கோடி இலங்கையர்களை பெருமையால் தலை நிமிரச் செய்துள்ளது.

இளம் வீரர் ஆஷிக்கின் இந்த வெற்றிக்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை ‘முஆய் தாய்’ சபையின் குழு மற்றும் நாடு முழுவதும் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்துத் தெரிவித்து வருகின்றனர்.

“உங்கள் கடின உழைப்பு அர்ப்பணிப்பு மற்றும் போராட்ட மனப்பான்மை எங்கள் இலங்கைத் திரு நாட்டிற்கு பேரும் புகழும் சேர்த்துள்ளன. வாழ்த்துக்கள் சாம்பியனே!” என்று வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.

இலங்கையின் ‘முஆய் தாய்’ வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ள நிலையில், ‘Senior Category’ என்பது, ‘முஆய் தாய்’ விளையாட்டின் உயர்ந்த, மிகவும் போட்டி நிறைந்த வயதுப் பிரிவாகும். இதில், இலங்கையிலிருந்து ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இளம் வீரர் ஆஷிக்கின் இது ஒரு தேசியப் பெருமை. இந்த வெற்றி, இலங்கையின் ‘முஆய் தாய்’ விளையாட்டு உலக அரங்கில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துள்ளது. அத்தோடு, இதுவரை இருந்த சந்தேகங்களையும் உடைத்து எறிந்துள்ளது.

இளம் வீரர் ஆஷிக், அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் கொடுத்துள்ளார். தென், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மேல் மாகாண மினுவாங்கொடை – கல்லொழுவையிலும் கையுறை அணியும் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஆஷிக் இப்போது ஒரு நடமாடும் உதாரணம். “நம்மாலும் முடியும்” என்ற நம்பிக்கையை அவர் விதைத்துள்ளார்.

ஆஷிக்கின் வெற்றிக்குப் பின்னால் நம்பிக்கையும் தன்னார்வமும் இருந்தது. ஆஷிக்கின் இந்தத் தங்கம் ஒரே நாளில் வந்து சேர்ந்தது அல்ல. இது அவரின் கடின உழைப்பு. நாள் முழுக்க ஜிம்மில் வியர்வை சிந்திய உழைப்பு. அவரது அர்ப்பணிப்பு. குடும்பம், நண்பர்கள், வசதிகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, விளையாட்டுக்கு மாத்திரமே ஆஷிக் வாழ்ந்த வாழ்க்கை. அவரது போராட்ட மனப்பான்மை. விழுந்து எழுந்து, அடிபட்டு மீண்டும் ரிங்கிற்குள் வந்த அந்தச் சிங்க மனம் தான், இன்று அவருக்குக் கிரீடம் சூட்டியுள்ளது.

“இளம் வீரர் ஆஷிக் சாம்பியனே! உங்கள் இந்தச் சாதனை எங்கள் நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நீங்கள் ரிங்கில் அடித்த ஒவ்வொரு குத்தும், இலங்கையின் பெயரை உலகம் முழுக்க ஒலிக்கச் செய்துள்ளது. வாழ்துக்கள் சாம்பியனே! நீங்கள் எங்கள் அனைவருக்கும் பெருமை!

மினுவாங்கொடை – கல்லொழுவை, தக்கியா வீதியைச் சேர்ந்த மர்ஹூம் நஸீர் நூர்தீன் – பாத்திமா றிஸ்மியா தம்பதியினரின் புதல்வரான இளம் வீரர் ஆஷிக் நஸீர், கல்லொழுவை ‘லூத்தா’ சர்வதேச ஆங்கிலப் பாடசாலையில் கல்வி பயின்றவர். ‘முஆய் தாய்’ விளையாட்டு அரங்கில் தங்கப் பதக்கம் வென்று, (30) செவ்வாய்க்கிழமை இரவு நாடு திரும்பிய இளம் வீரர் ஆஷிக் நஸீருக்கு, அவர் பிறந்து வளர்ந்த கல்லொழுவை கிராம மக்களால் இன மத மொழி வேறுபாடுகளையும் கடந்து (01) புதன்கிழமை காலை, கல்லொழுவை – அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மகத்தான பெரு வரவேற்பளிக்கப்பட்டமை பாராட்டத்தக்கது. அத்தோடு, சிங்கள சகோதரர்களாலும் மினுவாங்கொடை நாலந்தா ஆண்கள் கல்லூரியில் வைத்து இளம் வீரர் ஆஷிக் நஸீர் (வயது – 20) மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்று வந்த மினுவாங்கொடை பத்தண்டுவனயைச் சேர்ந்த இளம் வீரர் குலுனு நெத்துசர (வயது – 15) பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் விசேட அம்சமாக அமைந்திருந்தன.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *