அல்-குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்களுக்கான இருநாள் வதிவிட பயிற்சிநெறி
2026 ஜூன் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஏற்பாட்டில் முஅல்லிம்களுக்கான இருநாள் வதிவிட பயிற்சிநெறி ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனப்படும் புதிய பயணத்திற்கமைய, அல்-குர்ஆன் மத்ரஸாக்களில் கற்பிக்கும் முஅல்லிம்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில், சுமார் ஆறுவருட காலத்தின் பின்னர் இப்பயிற்சிநெறிகள் மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருநாட்கள் நடைபெற்ற குறித்த வகுப்புகளில் கற்றல் அணுகுமுறை, சிறார்களுடன் நடந்துகொள்ளும் விதம், கற்பித்தல் முறைமை, ஒழுக்கம் மற்றும் நடத்தை நெறிமுறை, தஜ்வீத் மற்றும் தத்ரீப் பயிற்சி, அல்-குர்ஆன் மத்ரஸா ‘தஜ்தீத்’ முறைமை, ‘மத்ஹலுல் குர்ஆன்’ மற்றும் ‘மஅரிஃபுல் வஹீ’ பாடத்திட்டங்களை கற்பிப்பதற்கான செய்முறைப் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கக் காட்சிகளுடன் தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
குறித்த பயிற்சிநெறியில் பல மாவட்டங்களில் இருந்து 18 முஅல்லிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
இதில், வளவாளர்களாக ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினரான அஷ்-ஷைக் முஹம்மத் ஸப்ராஸ், அஷ்-ஷைக் பஸால், அஷ்-ஷைக் அஃலம், அஷ்-ஷைக் அஸ்வர் அலி, அஷ்-ஷைக் இர்ஷாட், அஷ்-ஷைக் ராஷித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிகள் முஅல்லிமாக்களுக்கும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதற்கான விண்ணப்பங்களும் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





– ACJU Media –
