உள்நாடு

புறக்கோட்டை இ.போ.ச மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை; பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை

புறக்கோட்டை இ.போ.ச. மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புறக்கோட்டை இ.போ.ச. மத்திய பஸ் நிலையத்திற்கு இன்று (10) காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல். இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் தயார்.

பெண்களுக்கான கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்கு முதல் நாளன்றே (08) சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில், அவை மீண்டும் பொருத்தப்பட்டன. அதன் பின்னர் 9 ஆம் திகதி இரவு இரண்டாவது முறையாகவும் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன.

இது திட்டமிடப்பட்ட ஒரு குழுவின் செயல். பஸ் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அவசரக் கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தினோம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசியலில் நமக்குள் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இது பொதுமக்களின் சொத்து. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டது. இவற்றுக்குச் சேதம் விளைவிக்க எந்தவகையிலும் இடமளிக்க முடியாது. இதற்கெதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம்.

அதேபோல், இங்கு இனிமேல் பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். சிசிடிவி (CCTV) கெமராக்களின் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது. அதனையும் விரைவில் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *